search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்புக்குழு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு குழு தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் பாஸ்கரன், மாரிமுத்து, மகேந்திரன், சேகர், சிங்காரவேல், கிருஷ்ணன், சக்ரவர்த்தி, நாகராஜன், தமிழ்ச்செல்வி, மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதேபோல் தர்மபுரி ஆயுள் காப்பீட்டு கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைத்தலைவர் வேடியப்பன் தலைமை தாங்கினார். கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன், கிளைசெயலாளர் மகேந்திரன், பொருளாளர் சரவணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி சோமசுந்தரம், முகவர் சங்க நிர்வாகி கருணாநிதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். காப்பீட்டு கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காப்பீட்டு பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி.வரியை நீக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோல் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் கலீபுல்லா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, பழனிவேலு, சரவணன், செந்தில்வேலன், சந்துரு, சையத் ஜாமல், ரமேஷ், விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும். வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #tamilnews
    Next Story
    ×