search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை விழாவின்றி திறக்கலாம் - உயர்நீதிமன்றம்
    X

    சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை விழாவின்றி திறக்கலாம் - உயர்நீதிமன்றம்

    எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை ஐந்து நிமிட விழாவாக நடத்தி திறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. #MGRCentenaryArch #MadrasHC
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது என கூறியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சேஷசாயி, சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள நினைவு வளைவை திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


    அப்போது நீதிபதிகள் அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பினர்.

    "எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்?  ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துகளை பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர், காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கெனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா?

    இது போன்ற எந்த திட்டத்துக்காவது செயல்திட்டத்தை உருவாக்கி விட்டு வாருங்கள். அதுவரை திறக்க அனுமதிக்க மாட்டோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் அந்த நினைவு வளைவை பார்த்தால் எம்.ஜி.ஆர். பற்றிய நல்ல நினைவுகள் வருமென அரசு நினைப்பதில் என்ன தவறிருக்கிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இதற்கு பதிலளித்த மனுதாரர், அண்ணா நினைவாக நூலகம் கட்டியுள்ளார்கள். அதுபோல கட்டலாம். கல்வி, அறிவுத்திறன் வளர்ச்சிக்கு செலவிடலாம் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிவாஜி நினைவாக மணிமண்டபம் கட்டினார்கள். அதில் யார்? என்ன? பலனடைகிறார்கள்? அதுகூட நீர்நிலை இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    பின்னர் ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர்.

    இதுதொடர்பாக சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 5-ம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. #MGRCentenaryArch #MadrasHC
    Next Story
    ×