search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடி அருகே ரெயிலில் 2 பயணிகளிடம் ரூ.11 லட்சம் கொள்ளை
    X

    காட்பாடி அருகே ரெயிலில் 2 பயணிகளிடம் ரூ.11 லட்சம் கொள்ளை

    ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பயணிகளிடம் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை கொள்ளை நடந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் தோனாநள்ளியை அடுத்த நந்தகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி. பில்டிங் காண்டிராக்டர். இவர் தனது தொழில் வி‌ஷயமாக அடிக்கடி இந்த ரெயிலில் சென்னை வருவது வழக்கம்.

    நேற்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். ஏ.சி. 2-ம் வகுப்பு (எச்.ஏ.1) பெட்டி யில் ரூ.10 லட்சம் பணப்பெட்டியுடன் பயணம் செய்துள்ளார்.

    பணப்பெட்டியை அருகில் வைத்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில் காட்பாடி நிலையத்திற்கு ரெயில் வந்த போது திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது பணப்பெட்டியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அருகில் உள்ள பகுதி முழுவதும் தேடினார். கிடைக்கவில்லை.

    பணப்பெட்டியில் ரூ.10 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த காண்டிராக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த வண்ணம் இருந்தார்.

    அதே ரெயிலில் மற்றொரு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. 2-ம் படுக்கை வசதி பெட்டி எண் எஸ்-12ல் பயணம் செய்த சண்முகசுந்தரம் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை போய் உள்ளது.

    சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த அவர் மனைவியுடன் பயணம் செய்தபோது அவரிடம் இருந்த பையை அபேஸ் செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    ஒரே ரெயிலில் அடுத்தடுத்து பயணிகளிடம் கொள்ளை நடந்திருப்பது ரெயில் பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    பயணிகளை தாக்காமல் அவர்கள் தூங்கும் போது சக பயணியாக பெட்டிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசில் காண்டிராக்டர் பெரியசாமியும், சண்முகசுந்தரமும் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கொள்ளைப்போன ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியிலும் போலீசார் சோதனை நடத்தினர். எஸ்-12 பெட்டியின் கழிவறையில் சண்முகசுந்தரத்தின் கைப்பை வீசப்பட்டு இருந்ததை கைப்பற்றினர்.

    இதே போல் ரூ.10 லட்சம் வைத்திருந்த பணப்பெட்டி ஆம்பூர் பச்சக்குப்பத்தில் வீசப்பட்டு கிடந்தது. பணத்தை எடுத்துக் கொண்டு காலி பெட்டியை வீசியுள்ளனர். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

    ஜோலார்பேட்டை எல்லைக்குள்தான் கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை எடுத்து விட்டு பெட்டியை வீசி விட்டு அங்கு குதித்து தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். #tamilnews
    Next Story
    ×