search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக-அமமுக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு
    X

    திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக-அமமுக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல் இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. #ThiruvarurByElection #DMK #ADMK #AMMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி மூன்றும் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்தனர்.

    ஆளும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த 52 அ.தி.மு.க. நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 2016-ம் ஆண்டு தேர்தலின்போது கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார்.

    அதுபோல திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனும் மீண்டும் திருவாரூரில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளார். இவர் திருவாரூர் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 2 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர் மீண்டும் களம் இறங்க அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் பேசி வருகிறார்.

    இதற்கிடையே குத்தாலம் தொகுதியில் இருந்து 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாப்பா சுப்பிரமணியனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜின் முக்கிய ஆதரவாளர் ஒருவரும் வேட்பாளராக மாற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போகிறது.

    திருவாரூரில் களம் இறங்க அ.தி.மு.க.வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் 2016-ல் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    வேட்பாளரை அறிவித்ததும் பிரசார பணிகளைத் தொடங்கவும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தனியாக ஒரு குழுவும் உருவாக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் பிரசார பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இது பற்றிய முழு விபரமும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

    தி.மு.க.வும் திருவாரூர் இடைத்தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சொந்த தொகுதி என்பதோடு, இந்த தொகுதியில் இருந்து அவர் 2 தடவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க. சார்பில் களம் இறங்க 36 பேர் மனு கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பன்னீர் செல்வம்    பூண்டி கலைவாணன்  காமராஜ்
    அதிமுக                    திமுக                               அமமுக

    நேற்று மட்டும் 28 பேர் விருப்ப மனு கொடுத்தனர். நிறைய பேர் மு.க.ஸ்டாலின் போட்டியிட கூறி மனு கொடுத்தனர். திருவாரூரைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் உதயநிதியை வேட்பாளராக நிறுத்த கோரி மனு அளித்தனர். இதனால் தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவரது பெயரிலும் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இருவரும் திருவாரூரில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் மூத்த தலைவர்களும் நேர்காணல் நடத்த உள்ளனர்.

    நேர்காணல் முடிந்ததும் தி.மு.க. வேட்பாளரை உடனடியாக அறிவிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர். பூண்டி கலைவாணனும் இதனை சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், “கலைஞர் ஜெயித்த திருவாரூரில் தளபதி (மு.க.ஸ்டாலின்) போட்டியிட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்பினார்கள். திருவாரூர் தொகுதி மக்களின் விருப்பமும் அதுதான். ஆனால் திருவாரூரில் போட்டியிட விரும்பவில்லை என்று தளபதி தெளிவாக கூறிவிட்டார். அவரது உத்தரவின் பேரில்தான் நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன்” என்றார்.

    பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த 15 தி.மு.க. நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்படவே வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் களம் இறங்கியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது போல திருவாரூர் தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று தினகரன் கட்சியினர் சவால் விடுத்துள்ளனர்.

    தினகரன் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் பெயரை டி.டி.வி.தினகரன் இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்று கட்சிகளும் இன்றே வேட்பாளர்களை அறிவிப்பதால் திருவாரூரில் நாளை முதல் பிரசாரம் தொடங்க உள்ளது. 14-ந் தேதிக்கு பிறகு பிரசாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க.வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க.வை ஆதரிக்கும் கட்சிகள் குறித்து இன்னமும் தெளிவான தகவல் இல்லை.

    பா.ஜ.க. 6-ந்தேதி தனது முடிவை தெரிவிக்க உள்ளது. பா.ம.க.வும் இன்னமும் முடிவு செய்யவில்லை.

    நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்துப் போட்டியிடுகிறது. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் தனித்துப் போட்டியிட ஆலோசித்து வருகிறது. #ThiruvarurByElection #DMK #ADMK #AMMK
    Next Story
    ×