search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் டாஸ்மாக் காவலாளியை கட்டிப்போட்டு மதுபாட்டில்கள் கொள்ளை
    X

    தஞ்சையில் டாஸ்மாக் காவலாளியை கட்டிப்போட்டு மதுபாட்டில்கள் கொள்ளை

    தஞ்சையில் பரபரப்பு டாஸ்மாக் காவலாளியை கட்டிப்போட்டு மதுபாட்டில்கள் கொள்ளை மோட்டார் சைக்கிளையும் திருடி கும்பல் கைவரிசை

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடித்த மர்ம கும்பல் காவலாளியை கட்டிப்போட்டு நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சை அருகே பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரை பகுதியில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் கண்ணன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். டாஸ்மாக் கடையில் காவலாளியாக நாகராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த டாஸ்மாக் கடை இருக்கும் இடமானது அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.

    இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் கடையில் பணி முடிந்து கண்ணன் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு காவலாளி நாகராஜன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் காவலாளி நாகராஜனை தாக்கிவிட்டு கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த 300 குவாட்டர் பாட்டில்களை திருடியுள்ளனர்.

    பின்னர் வெளியே வந்த கொள்ளையர்கள் காவலாளி கையில் அணிந்திருந்த தங்க மோதிரம், வாட்ச் ஆகியவற்றை பறித்தனர். இதையடுத்து நாகராஜனை கட்டிப்போட்டுவிட்டு அவரது வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு அங்கு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர் காவலாளி நாகராஜனின் முனகல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது அவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர். அதனை தொடர்ந்து கட்டப்பட்டிருந்த அவரது கைகால்களை அவிழ்த்து விட்டதையடுத்து நடந்த சம்பவங்களை அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காவலாளி நாகராஜனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சையில் டாஸ்மாக் காவலாளியை தாக்கி மதுபாட்டில்கள், கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×