search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் பாரில் அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் பாரில் அதிகாரிகள் அதிரடி சோதனை

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். #PlasticBan
    திருப்பூர்:

    தமிழகத்தில் நேற்று முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளருக்கு பதில் கண்ணாடி டம்ளரும், தண்ணீர் பாக்கெட்டுக்கு பதில் 300 மி.லி. கொண்ட தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என டாஸ்மாக் கடை உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு மது குடிக்க வருபவர்களுக்கு கண்ணாடி டம்ளர், 300 மி.லி. தண்ணீர் பாட்டில் மற்றும் சிறிய அளவிலான திண்பண்டங்கள் ரூ. 15 முதல் 20 -க்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதன், உதவி மேலாளர்கள் உள்ளடங்கிய 4 குழுவினர் திருப்பூர், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    அங்கு பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்த கூடாது என பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதன் கூறினார்.

    திருப்பூர் மாவட்டத்தில் புத்தாண்டின் போது டாஸ்மாக் மது விற்பனை கடுமையாக சரிந்து உள்ளது.

    கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாள் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 13 ஆயிரத்து 205 பெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. பீர் 10 ஆயிரத்து 210 பெட்டி விற்பனை ஆகி இருக்கிறது.

    ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாளான 31-ந் தேதி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 2 ஆயிரத்து 220 பெட்டிகளும், பீர் 1,890 பெட்டிகளும் தான் விற்பனை ஆகி உள்ளது.மது விற்பனை சரிவு குறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதனிடம் கேட்ட போது கூறியதாவது-

    திருப்பூரில் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தான் அதிக அளவில் தங்கி உள்ளனர்.தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர் தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாட சென்று விட்டனர்.இதனால் தான் விற்பனை குறைந்து உள்ளது. இது மட்டுமின்றி குடி போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களை போலீசார் பிடித்து லைசென்ஸ் ரத்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.இதுவும் மது விற்பனை குறைவுக்கு ஒரு காரணமாகும். பொங்கலுக்கு பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    Next Story
    ×