search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    ஜெயலலிதா சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaAssets
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக பல ஆயிரம் கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    அதேபோல், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். எம்.ஜி.ஆர். சொத்துக்களை பராமரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனை நியமித்தது போல் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்கவும், அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதனிடையே, ஜெயலலிதா பெயரில் ரூ.913 கோடி சொத்துக்கள் உள்ளதால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.



    இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? என கேள்வி எழுப்பியது. அத்துடன், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் ஆகியோர் உள்ளதால் இதுகுறித்து அவர்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

    மேலும், மனுதாரரான புகழேந்தி ஜெயலலிதாவின் எந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கேட்பது அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானத்தை மீறிய வகையிலான சொத்துக்களா? அல்லது, ஜெயலலிதா தனது வேட்பு மனு தாக்கலின்போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களையா? என இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

    இந்த இரண்டு வகையான சொத்து விபரங்களையும் ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மொத்த சொத்து விபரங்களை தெரிந்துகொள்ள முடியாத நிலை நீடிப்பதால் அவரது சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaAssets

    Next Story
    ×