search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு
    X
    சென்னை ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - அதிகாரிகளின் அதிரடி சோதனை தொடங்கியது

    பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் கோயம்பேடு, பிராட்வேயில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். #Plasticban #TN
    சென்னை:

    சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    இது தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்தது.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்ட பிளாஸ்டிக் கேரிபேக், டீ கப், தண்ணீர் பாக்கெட், ஸ்டிரா, பிளாஸ்டிக் தட்டு உள்பட 14 வகையான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

    அவற்றுக்கு பதிலாக துணிப்பை, கண்ணாடி தம்ளர், வாழை இலை, தையல் இலை, பனை ஓலை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே தமிழக அரசு விழிப்புணர்வு பிரசாரங்கள், அறிவிப்புகள் வெளியிட்டு வந்த நிலையில் சில்லரை வியாபாரிகள், காய்கறி வியாபாரம் செய்வோர் “இனி துணிப்பை எடுத்து வாருங்கள்” என்று வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.

    இதனால் நேற்று சென்னை நகரில் பெருமளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து விட்டது. ஓட்டல்களில் பார்சல்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகித பைகள் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பார்சலுக்கு பாத்திரங்கள் எடுத்து வந்தனர். அதே போல் உணவு பரிமாற வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டன.

    இதேபோல் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள், டாஸ்மாக் பார்கள், பூக்கடைகள், மால்கள் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து விட்டதை காண முடிந்தது. பிளாஸ்டிக் தடை காரணமாக துணிப்பைகளுக்கும், வாழை இலை, காகித பைகள் போன்றவற்றுக்கும் மவுசு அதிகரித்து அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    பிளாஸ்டிக் தடையை சென்னை முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முதல் கண்காணிக்க தொடங்கினார்கள். நேற்று விடுமுறை என்பதால் கண்காணிப்பில் குறைவான அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களும், சில்லரை வியாபாரிகளும் தாங்களே முன்வந்து பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த முன் வந்தனர்.

    பொதுமக்கள், வியாபாரிகள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகளை அந்தந்த மண்டலங்களில் மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி ஊழியர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனர்.

    இன்று முதல் பிளாஸ்டிக் தடை முழு வீச்சில் அமல்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி சுகாதார அதிகாரி கூறியதாவது:-

    பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தாங்களே முன்வந்து பிளாஸ்டிக்கை தவிர்த்து வருகிறார்கள். நேற்று 200 மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று முதல் நடவடிக்கையில் இறங்குவோம்.

    நெல்லையில் டீக்கடையில் எவர்சில்வர் பாத்திரத்தில் பார்சல் டீ

    கடைகள், வியாபார நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்வோம். பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் கோயம்பேடு, பிராட்வேயில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்த கட்டமாக அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே உள்ள மத்திய அரசின் பிளாஸ்டிக் தடை சட்டத்தின் கீழ் அபராதம் விதிப்பதா? அல்லது மாநில அரசு தனியாக சட்டம் இயற்றுவதா? என்பது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது.

    அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இது தொடர்பாக விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. #Plasticban #TN

    Next Story
    ×