search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து -  2 பேர் பலி
    X

    பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து - 2 பேர் பலி

    பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண்ணாடம்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆர்.கே.தில்வாடே பகுதியை சேர்ந்த சிலர் தமிழகத்துக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த லத்திஹரிசன் (வயது 60) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஒருபஸ்சில் ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அவர்கள் சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் நேற்று இரவு கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கல்லூர் பகுதியில் வந்துகொண்டிருந்தது. இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் பஸ்சை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு பஸ்சில் இருந்த 50 பேரும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கினர்.

    அவர்கள் தங்கியிருந்த கோவிலில் இன்று அதிகாலை பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து கோவிலில் தங்கியிருந்த லத்திஹரிசன் உள்பட 50 பேரும் எழுந்தனர். அவர்கள் குளிப்பதற்காக கோவிலின் அருகே உள்ள ஒரு மோட்டார் கொட்ட கைக்கு செல்வதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக பெரம்பலூர் மாவட்டம் கீழபெரம்பலூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் (34) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டிருந்தார். அந்த பகுதியில் பனிபொழிவு அதிகமாக இருந்ததால் சாலையை கடக்க முயன்ற லத்தி ஹரிசன் மீது பழனிவேலின் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பழனிவேல் மற்றும் லத்திஹரிசன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். லத்திஹரிசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிவேல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கும், ராமநத்தம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிவேல் பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான லத்தி ஹரிசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×