search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்- வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்
    X

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்- வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்

    திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கின. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

    தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 3-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 10-ந்தேதி மனுத்தாக்கலுக்கு இறுதி நாளாகும்.


    11-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களைத் திரும்பப் பெற 14-ந்தேதி கடைசி நாளாகும். 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடப்பதைத் தொடர்ந்து 31-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்தன.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கின. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று இரு கட்சிகளும் அறிவித்து உள்ளன. மனு கொடுத்தவர்களிடம் அ.தி.மு.க., தி.மு.க. மூத்த தலைவர்கள் 4-ந்தேதி நேர்காணல் நடத்த உள்ளனர்.

    அதன் அடிப்படையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க., தி.மு.க. முடிவு செய்துள்ளன. நேர்காணல் முடிந்த சிறிது நேரத்தில் 4-ந்தேதி இரவே தி.மு.க. வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அறிவித்து விடுவார் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. சார்பில் திருவாரூரில் களம் இறங்க உள்ளூர் நிர்வாகிகள் பலரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு போட்டியிட தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. சார்பில் கடந்த தடவை போட்டியிட்ட திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் இருவரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    இதன் காரணமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளில் அ.தி.மு.க., தி.மு.க., மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர் தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதியாகும். 1962-ம் ஆண்டு முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.

    தி.மு.க. 1971, 1977, 1996, 2001, 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 7 தடவை வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1967, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் 5 தடவை வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. திருவாரூரில் ஒரு தடவை கூட வெற்றி பெற்றதில்லை.

    இந்த தடவையும் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. இந்த தடவை திருவாரூரில் பலமுனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை திருவாரூர் தேர்தல் பற்றி ஆலோசித்து வருகின்றன.

    எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி ஏற்படும். தி.மு.க.வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ஆதரவாக உள்ளன.

    அ.தி.மு.க.வை எத்தனை கட்சிகள் ஆதரிக்கும் என்பது இனி தான் தெரியும். கஜா புயல் கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவம் ஆடியபோது திருவாரூர் தொகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கஜா புயலின் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. பிரசார பணிகளில் மாற்றம் ஏற்படுத்தி புதிய வியூகத்தை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் இப்போதே திருவாரூர் தொகுதிக்குள் உலா வரத் தொடங்கி விட்டனர். இதனால் திருவாரூர் தொகுதியில் இன்றே விறுவிறுப்பு உருவாகி விட்டது. #ThiruvarurByElection
    Next Story
    ×