search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் நிவாரணத்துக்கு வி.ஏ.ஓ. லஞ்சம்: வாலிபர் தற்கொலை மிரட்டல்
    X

    கஜா புயல் நிவாரணத்துக்கு வி.ஏ.ஓ. லஞ்சம்: வாலிபர் தற்கொலை மிரட்டல்

    கஜா புயல் நிவாரணத்துக்கு வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்பதால் கலெக்டர் முன்பு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #relief #gajacyclone

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செருவாவிடுதி கிராமம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 35).

    இந்த நிலையில் கடந்த மாதம் கஜா புயலால் திருப்பதிக்கு சொந்தமான தோப்பில் இருந்த தென்னை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது. அந்த சமயத்தில் தென்னை மரத்தின் அடியில் சிக்கி திருப்பதியின் தந்தை சின்னையன் (75) பரிதாபமாக இறந்தார்.

    பிறகு மறுநாள் தான் சின்னையனின் உடலை கண்டு மீட்டனர். தந்தையின் உடலை பார்த்து திருப்பதி கதறி அழுதார்.

    இதன்பின்னர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் நரேந்திரனை திருப்பதி சந்தித்து, தனது தந்தை தென்னை மரம் விழுந்து பலியானதற்கு நிவாரண தொகையான ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று முறையீட்டார்.

    அதற்கு வி.ஏ.ஓ. தனக்கு 3 சதவீதம் கமி‌ஷனாக தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் , இதுகுறித்து ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார், புயல் நிவாரண கண்காணிப்பு அதிகாரி ஆகியோருக்கு கடந்த 23-ந் தேதி மனு அனுப்பினார். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அப்போது கூட்டத்துக்கு திருப்பதி வந்தார். திடீரென அவர் கலெக்டரிடம், கஜா புயல் நிவாரணம் வழங்க வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்கிறார். புயலால் தென்னை மரங்களை இழந்து விட்டதால் என்னால் லஞ்சம் வழங்க இயலாது.

    எனவே எனது தந்தை இறந்ததற்கு நிவாரணம் வழங்காவிட்டால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.

    இதை கேட்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு நின்ற போலீசார் , திருப்பதியை வெளியே அழைத்து சென்றனர்.

    கலெக்டர் முன்பு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #relief #gajacyclone

    Next Story
    ×