search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 நாளாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
    X

    6 நாளாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

    கடந்த 6 நாள்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று இரவு வாபஸ் பெறப்பட்டது. #TeachersProtest
    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு நிலவுவதை கண்டித்து சென்னையில் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2009-ம் ஆண்டுக்குப் பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு குறைவான சம்பளமும், அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான சம்பளமும் வழங்கப்படுகிறது.

    இந்த ஊதிய முரண்பாடை களைய வேண்டும் என்று கூறி இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் ‘‘சமவேலைக்கு சம ஊதியம்’’ என்ற கோ‌ஷத்தை முன் வைத்து போராடி வருகிறார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
    தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக கடந்த 24-ந்தேதி ஆசிரியர்- ஆசிரியைகள் குவிந்து இருந்தனர்.

    அவர்கள் சட்ட விரோதமாக கூடியதாக கூறி போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இங்கு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்டேடியத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அவர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அங்கு தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெட்ட வெளியில் மரத்தடியிலும் ஆங்காங்கேயும் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

    இதுவரை மொத்தம் 210 ஆசிரியர்- ஆசிரியைகள் மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. 

    கோரிக்கைகள் குறித்து ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உறுதியளித்தார்.

    பிரதீப் யாதவின் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். #TeachersProtest
    Next Story
    ×