search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாட்டவயல் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்து
    X

    பாட்டவயல் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்து

    பாட்டவயல் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சின் முன்பாகம் சேதம் அடைந்தது.
    கூடலூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர், ஊட்டி, மேட்டுப்பாளையம் கிளை அலுவலகங்களில் இருந்து மைசூரூ, பெங்களூரூ, கேரளாவுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்துக்குள் மட்டும் பெரும்பாலும் பழுதடைந்த பஸ்களே இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம், ஊட்டியில் இருந்து மைசூரூ, பெங்களூரூ பகுதிக்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு நல்ல நிலையில் இயங்கக்கூடிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி, மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் அடிக்கடி ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10 விபத்துகள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் மாலையில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா பயணி ஒருவரின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது ஊட்டி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பாகம் சேதம் அடைந்தது. மேலும் காரும் அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது காரில் இருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பீரான்(வயது 65), ஆயிஷாபீ (60) ஆகியோர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதேபோல் சுல்தான்பத்தேரியில் இருந்து கூடலூருக்கு நேற்று தமிழக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பாட்டவயல் அருகே நம்பிக்கொல்லி என்ற இடத்தில் வந்தபோது, கார் ஒன்று பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. இந்த விபத்தில் பஸ் சேதம் அடைந்தது. மேலும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழக அரசு பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக பஸ்கள் புதியதாகவும், நல்ல நிலையிலும் இயக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாத சுற்றுலா பயணிகளால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு, தமிழக பஸ் சேதம் அடைந்து வருகின்றன. குறிப்பாக புதிய பஸ்களும் விபத்துகளில் சிக்குவது கவலை அளிப்பதாக உள்ளது. 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×