search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் மர்ம மரணம்: தப்பி ஓடிய கணவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
    X

    சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் மர்ம மரணம்: தப்பி ஓடிய கணவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

    காட்டுமன்னார்கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகள் சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் கணவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வகுமார் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கும், நாகை மாவட்டம் வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த அனுசுயா (23) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அனுசுயா எம்.ஏ. படித்துள்ளார். தற்போது அனுசுயா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டதால் அனுசுயா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இருவீட்டினரும் சமாதானம் பேசி செல்வகுமாருடன் அனுசுயாவை அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும், அவரது மனைவியும் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று விட்டனர். வீட்டில் அனுசுயாவும், செல்வகுமாரும் இருந்தனர்.

    அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து செல்வகுமார் தனது தந்தை மூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். உடனே மூர்த்தி, அனுசுயாவின் பெற்றோருக்கு இது குறித்து கூறியுள்ளார்.

    அனுசுயா இறந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பழஞ்சநல்லூர் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையே இந்த தகவல் காட்டுமன்னார் கோவில் போலீசுக்கு தெரிந்தது. சேத்தியாத் தோப்பு துணை சூப்பிரண்டு ஜவகர்லால், காட்டு மன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அனுசுயாவின் உடலை கைப்பற்றி காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் செல்வகுமாரை தேடினர். அவரை காணவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அனுசுயாவின் பெற்றோர் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து அனுசுயாவின் பெற்றோர், உறவினர்கள் காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்றனர்.

    அவர்கள் அனுசுயாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இந்த பிரச்சினையில் போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்துகின்றனர். எனவே, அனுசுயாவின் சாவுக்கு காரணமான அவரது கணவர் செல்வகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அனுசுயாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அனுசுயாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் தலைமறைவாகி விட்ட அனுசுயாவின் கணவர் செல்வகுமாரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் உத்தரவின் பேரில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்ட செல்வகுமாரை தேடிவருகின்றனர்.

    செல்வகுமார் பிடிபட்டால்தான் அனுசுயாவின் சாவில் உள்ள உண்மை நிலை தெரியவரும்.

    Next Story
    ×