search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் வழக்கில் புகார் கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கியது
    X

    குட்கா ஊழல் வழக்கில் புகார் கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கியது

    குட்கா ஊழல் வழக்கில் புகார் கூறப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் அதிரடி விசாரணை தொடங்கியது. 30 போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். #Gutkascam
    சென்னை:

    ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதலில் இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.

    பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் கையில் எடுத்தனர். கையில் எடுத்தவுடன் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீசின் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் ‘டி.ஜி.பி.’ டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து குட்கா வியாபாரியும் தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து விட்டனர்.

    மேலும் 2-வது கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை மையமாக வைத்து சி.பி.ஐ. அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து ஜனவரி மாதம் முதல் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில் ஜனவரி வரை காத்திருக்காமல், போலீஸ் அதிகாரிகளிடம் நேற்று விசாரணை தொடங்கிவிட்டது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் நேற்றைய விசாரணைக்கு ஆஜரானதாக தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு வந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு பின்பக்க வாசல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது.



    விசாரணைக்கு வந்த 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிடவில்லை.

    குட்கா வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், குட்கா ஊழல் நடந்த போது சென்னை போலீசில் பணியாற்றிய 30 பேரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சென்னை நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்த 30 பேரின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை களத்தில் தற்போது இறங்கி உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkascam
    Next Story
    ×