search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைகிறார்கள்
    X

    செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைகிறார்கள்

    கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. #senthilbalaji #mkstalin

    கரூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

    இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா இன்று மாலை 5 மணிக்கு கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடக்கிறது.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக விழா நடைபெறும் பகுதியில் சென்னை அண்ணா அறிவாலயம் போன்று பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வந்தார். பின்னர் அங்கு ஒரு ஓட்டலில் தங்கினார். இன்று காலை 8 மணியளவில் அவர் கோவையில் இருந்து காரில் புறப்பட்டு கரூர் வந்தடைந்தார். கரூர்- கோவை ரோடு அருகே மாவட்ட எல்லையில் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரண்டு மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கரூரில் உள்ள தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பலரின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து மு.க. ஸ்டாலின் பேசினார்.

    தொடர்ந்து மதியம் மீண்டும் ஓட்டலுக்கு சென்று தங்கி ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலின், மாலை 4 மணியளவில் அங்கிருந்து விழா நடைபெறும் கலைவாணி நகருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

    அவர் செல்லும் வழியில் கரூர் 80 அடி ரோடு சந்திப்பில் மேளதாளம் மற்றும் ஒயிலாட்டத்துடன் தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின் மாலை 4.15 மணிக்கு, கரூர் உழவர்சந்தை அருகிலும், 4.20 மணிக்கு லைட் ஹவுஸ் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.


    பின்னர் ராயனூரில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார். அப்போது செந்தில்பாலாஜி தலைமையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாங்கள் தி.மு.க.வில் இணைந்து அதற்கான உறுதிமொழி படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் அளிக்கின்றனர்.

    இதையடுத்து தொண்டர்கள் முன்னிலையில் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, சின்னசாமி, முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, ராமர் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன் நன்றி கூறுகிறார்.

    மு.க.ஸ்டாலினை வரவேற்று கரூர் நகரம் கோவை ரோடு, திருமாநிலையூர், அமராவதி பாலம் உள்பட பல்வேறு இடங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மு.க.ஸ்டாலினை வரவேற்று ராயனூர் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு மின் னொளியில் ஜொலிக்கிறது.

    கரூரில் நடைபெறுகிற இந்த இணைப்பு விழாவானது கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு எழுச்சியை கொடுக்கும் என நம்பப்படுகிறது. கரூர் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் ஈரோடு புறப்பட்டு செல்கிறார்.  #senthilbalaji #mkstalin

    Next Story
    ×