search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்- கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களில்  1¼ லட்சம் பேர் விண்ணப்பம்
    X

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்- கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களில் 1¼ லட்சம் பேர் விண்ணப்பம்

    கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர 1¼ லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். #GajaCyclone
    சென்னை:

    வறுமை ஒழிப்பு, வேலை செய்யும் உரிமை, பெண்களுக்கு சமத்துவ உரிமை ஆகிய ஊரக மேம்பாட்டு அம்சங்களுக்கு அடித்தளமிட்ட திட்டமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமைந்துள்ளது. மத்திய அரசில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது இந்தத் திட்டம் தமிழகத்தில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி அமலுக்கு வந்தது. முதலில் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக (சென்னை தவிர) 31 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் நிதிப் பங்களிப்பு செய்கின்றன.

    இந்த திட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 100 நாட்களுக்கு ஒருவர் வேலை பெற முடியும். பணியாற்றி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். திட்டத்தின் தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஊதியம் ரூ.80 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிறகு 2009-10-ம் ஆண்டில் ரூ.100 என்று உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.224ஐ எட்டியுள்ளது. இந்த ஊதியத் தொகை, பணியாளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். 18 வயதைக் கடந்த எவரும் இந்தத் திட்டத்தில் இணைய தகுதி உடையவராவர்.

    தமிழகத்தில் இந்தத் திட்டம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஊரகப் பகுதிகளில் வீட்டுக்கு உள்ளேயே கட்டுப்பட்டுக் கிடந்த பெண்களில் 84.78 சதவீதம் பேர் இன்று இந்த திட்டத்தின் கீழ் வேலையும் ஊதியமும் பெறுகின்றனர். ஆணும், பெண்ணும் பணிக்குச் சென்று ஊதியம் பெறுவதால், சமூக, பொருளாதார ரீதியில் அந்தக் குடும்பம் முன்னேற்றமடைவதோடு, ஊரகப் பகுதியும் மேம்பாட்டை நோக்கிச் செல்கிறது.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 153 வகையான பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 100 இயற்கை வள மேலாண்மைப் பணிகளாகும். இந்த 100 பணிகளில் 71 சம்பந்தப்பட்ட பணிகள், நீர் தொடர்புடையவை ஆகும்.

    சாதாரண காலகட்டங்களில் 100 நாட்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் 150 நாட்கள் வரை வேலை நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 131 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 80.74 லட்சம் பேர் பெண்கள். பதிவு செய்தவர்களில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 87.40 லட்சமாகும். அவர்களில் 67.75 லட்சம் பேர் பெண்கள்; 24.84 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்; 1.25 லட்சம் பேர் பழங்குடியினராகும்.

    இந்தத் திட்டத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 4.07 லட்சம் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் பணிகள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.3,803.74 கோடி நிதியை மத்திய அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. கட்டுமானப் பொருள் செலவீனம் மற்றும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியமாக ஒதுக்கப்பட்ட ரூ.842.89 கோடி தொகையில் 25 சதவீதத்தை தமிழக அரசு தனது பங்காக அளிக்கிறது.

    இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உடனே வழங்கும் மாநிலங்களில் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. 15 நாட்களுக்குள் 99.19 சதவீதம் ஊதியம் வழங்கி அதற்கான விருதை தமிழக அரசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் சில மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கியதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் அதிகம் நம்பியிருந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு விவசாயத் தொழில் அழிந்துவிட்டது. பயிர்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கோப்புப்படம்

    இருந்த வேலையை இழந்து, வருமானத்துக்கு வழியில்லாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றுதான் உடனே கைகொடுக்கும் திட்டம் என்பதால் அவர்கள் பலரும் இந்த மாவட்டங்களில் வேலை கேட்டு பெயர்ப் பதிவு செய்தனர்.

    இந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கு பதிவு செய்து, பணியாற்றுவோரின் எண்ணிக்கை தற்போது அதிக அளவில் உயர்ந்திருக்கிறது. அதன்படி சாதாரணமாக நாளொன்றுக்கு 37 ஆயிரத்து 932 பேர் பணியாற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரத்து 68 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 55 ஆயிரம் பேரும்; 12 ஆயிரத்து 76 பேர் பணியாற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கூடுதலாக 35 ஆயிரத்து 924 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 48 ஆயிரம் பேரும்; 15 ஆயிரத்து 323 பேர் பணியாற்றும் நாகை மாவட்டத்தில் கூடுதலாக 42 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 58 ஆயிரம் பேரும்; 42 ஆயிரத்து 141 பேர் பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 859 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 74 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில் கூடுதலாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவர்கள் அனைவரும் சாய்ந்து கிடக்கும் மரங்களை அறுத்தல், வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல், சாலைகள் சீரமைப்பு, சேதமடைந்த அரசு கட்டிடங்கள் சீரமைப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கூடுதல் நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக முடிவு செய்துள்ளது. #GajaCyclone
    Next Story
    ×