search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள்
    X

    திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள்

    திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.

    வடமதுரை:

    திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது மாணவி மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் மோதி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பராமரிப்பு முறையாக இல்லாததால் விபத்துகள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த பேரிகார்டுகளில் ஒளிரும் பட்டைகள் இல்லாததால் இரவு நேரத்தில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. நேற்றிரவும் தொடர்ந்து 3 வாகனங்கள் மோதியதில் பேரிகார்டு சேதமடைந்தது. மேலும் வாகனங்களும் சேதமடைந்ததால் ஆத்திர மடைந்த ஓட்டுனர்கள் பேரிகார்டுகளை அப்புறப்படுத்தி சென்டர் மீடியனில் வீசிஎறிந்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் விபத்தை தவிர்ப்பதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

    இதன் காரணமாகவே தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. போலீசாரும் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் விதிகளை மீறி அதிவேகமாக செல்கின்றனர். 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டதற்கான அவசியம் புரியாமல் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் பணம் வசூலில் குறியாக உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனாலேயே பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்றனர்.

    Next Story
    ×