search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு- அன்புமணி ராமதாஸ்
    X

    பாராளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு- அன்புமணி ராமதாஸ்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு அறிவிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். #PMK #AnbumaniRamadoss
    சேலம்:

    சேலத்தில் இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது. இது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக இதை செய்துள்ளது.

    தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது. இது குறித்து முதல்-அமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவில்லை. மேகதாதுவில் அணைக் கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றது தமிழகத்திற்கு எதிரானது. டெல்டா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் முதல்வர் சட்டசபையை கூட்டி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும்.

    மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டமசோதாவால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அதனை எதிர்க்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே 2 முறை மூடி திறக்கப்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக திறக்கப்பட உள்ளது. இதில் தமிழக அரசு தற்போது நாடகம் ஆடி வருகிறது. நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்கள் பற்றி கோர்ட்டில் மாநில அரசு சொல்ல வேண்டும்.

    கஜா புயலுக்கு இதுவரையிலும் நிவாரணம் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. இதையும் வங்கிகள் விவசாய கடனுக்காக பிடித்து வைத்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். பின்னர் கணக்கீடு செய்து சேதத்திற்கு தகுந்தப்படி வழங்க வேண்டும். சென்னை- சேலம் இடையே 8-வழிசாலை தேவையற்றது. நான் தொடுத்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வரவுள்ளது. கன்னியாகுமரி- சென்னை 8 வழிச்சாலை போடலாம். மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் சேலம் கிழக்கு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஆண்டில் மட்டும் மேட்டூரில் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இதில் 5 டி.எம்.சி. தண்ணீர் எடுத்தால் சேலம் கிழக்கு மாவட்டம் வளமடையும். சேலம் இரும்பாலைக்கு 4300 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது. தற்போது இந்த நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதுடன் ஏற்கனவே இந்த நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கே நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

    விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. தரை வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். விவசாயத்தை அழித்தால் அடுத்த தலைமுறை வாழமுடியாது. தேர்தலில் ஓட்டுச் சீட்டு முறை கொண்டு வருவது நல்லது.


    பொன் மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி. சிலை திருட்டு வி‌ஷயத்தில் முக்கிய பிரமுகர்கள் சிக்குவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நாங்கள் சி.பி.ஐ.க்கு கேட்டபோது அரசு எதிர்த்தது.

    பி.சி.ஆர். வழக்குகளில் யாரும் பாதிக்கக்கூடாது. தேர்தலில் கூட்டணி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் நிலைபாடு குறித்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் இரர். அருள், முன்னாள் எம்.எல்.ஏ.கார்த்தி, மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் உள்பட பலர் உடன் இருந்தனர். #PMK #AnbumaniRamadoss
    Next Story
    ×