search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலில் விழுந்த மரங்களை அகற்றாததால் பாம்புகள் நடமாட்டம்- மாணவர்கள் அச்சம்
    X

    புயலில் விழுந்த மரங்களை அகற்றாததால் பாம்புகள் நடமாட்டம்- மாணவர்கள் அச்சம்

    முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் புயலில் விழுந்த மரங்களை அகற்றாததால் பாம்புகள் ஊர்ந்து வருகிறது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருகாலத்தில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இதில் படித்தவர்கள் ஏராளமானவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் பல்வேறு அரசு உயர்ந்த பதவிகளில் உள்ளனர். தற்பொழுது இங்கு 296 மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். 21 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிடிஏ நிர்வாகம் வாயிலாகவும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சமீபகாலமாக இப்பள்ளியில் இயங்கி வந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் முறையாக இயங்காததால் பள்ளி நிர்வாகம் பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் படிபடியாக கல்வி தரமும் குறைந்துவிட்டது. இதற்கிடையில் ஒரு சில ஆசிரியர்களின் முறையற்ற அணுகுமுறையால் பள்ளி மாணவர்கள் மத்தியில் அடிக்கடி கோஷ்டி மோதல் உள்பட மத மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் மாணவர்களும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு வரும் நிலை உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த வி.என்.சண்முகம் மரணம் அடைந்தார். 

    இதனையடுத்து அந்த பதவி காலியாகிவிட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் இதுநாள்வரை தலைவரை தேர்ந்து எடுக்க முன்வரவில்லை. இதனால் பள்ளியில் சமீபகாலமாக தொடர்ச்சியாக பல விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தற்போதைய பிடிஏவை கலைத்துவிட்டு புதிய கமிட்டியை தேர்வு செய்யவேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும், முக்கிய பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் நீண்ட காலமாகமாக ஏராளமான மரங்கள் நட்டு பாராமரிக்கப்பட்டு வந்தன. இதில் மரத்து நிழலில் கூட பாட வகுப்புகளும் நடத்தபட்ட வந்த நிலையில் அங்கிருந்த பழமையான மரங்கள் விலைஉயர்ந்த மரங்கள் பலவற்றை கடந்த மாதம் வந்த கஜா புயல் சாய்த்தது. பள்ளி வளாகத்தில் குளுமை தந்த மரங்கள் சாய்ந்தது கண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலையடைந்தனர்.

    கஜா சாய்த்த மரங்கள் இன்று வரை அகற்றப்படாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக அதே இடத்தில் கிடக்கின்றன. மாணவர்கள் படிப்போடு ஓடியாடி விளயாட வழியன்றி, மரங்கள் இடையூறாக உள்ளது. மேலும் அங்கு பாம்புகள் ஊர்ந்து வருகிறது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன் கூறும்போது,

    பள்ளி வளாகத்தில் கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தநிலையில் சில குறுக்கீடுகளால், பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. அதனால் வரும் வாரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து மரம் அகற்றுவது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது. மேலும் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றாமல் நிமிர்த்தி நடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் முகம்மது மைதீன் கூறுகையில், கஜா புயலால் பள்ளியில் உள்ள பெரும்பாலான பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்தது விட்டது. இதுகுறித்தும் அதை அகற்றும் பணி குறித்தும் பிடிஏ உறுப்பினர்களிடம் இதுவரை கலந்தாலோசிக்க வில்லை. உறுப்பினர்கள் நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது மாணவர்களுக்கு சுகாதார பாதிப்பு மற்றும் வி‌ஷப்பூச்சிகள் தாக்கும் நிலையில் பள்ளி வளாகம் உள்ளது என்றார். #gajacyclone

    Next Story
    ×