search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம்:

    தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதையடுத்து விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோகைப்பாடி, நன்னாடு, வழுதரெட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து லேசாக மழை தூரிக்கொண்டிருந்தது. இரவு 9.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    2 மணி நேரம் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இன்று காலையும் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், அரசூர், மயிலம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்யத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை தொடர்ந்து தூரிக்கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்தமழை சிறிது நேரம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும் வாகனங்களை ஓட்டிசென்றனர். தொடர்ந்து மழை லேசாக விட்டு விட்டு தூரிக்கொண்டே இருந்தது.

    பெண்ணாடம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து லேசாக மழை பெய்தது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதைத்தொடர்ந்து மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள பெண்ணாடம் கடை வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான அம்புஜ வல்லி பேட்டை, கள்ளிப்பாடி, காவனூர், எசனூர், வெங்கடசமுத்திரம், நகரபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    1 மணிநேரம் பெய்த மழையினால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டர்) பின்வருமாறு:-

    சிதம்பரம்-35, கொத்தவாச்சேரி-32, அண்ணாமலைநகர்-31, சேத்தியாத்தோப்பு-30, புவனகிரி-27, ஸ்ரீமுஷ்ணம்-23.40, பரங்கிப்பேட்டை-23, காட்டு மன்னார் கோவில்-22, வடக்குத்து-19, குறிஞ்சிப்பாடி-15, கடலூர்-15.80, லால்பேட்டை-13.80, கீழ்செறுவாய்-13, வேப்பூர்-11, தொழுதூர்-7, விருத்தாசலம்-5.30, பண்ருட்டி-3.

    Next Story
    ×