search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
    X

    காரைக்குடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

    காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் ஆயிரம் வைசிய மகாலில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு அவர் பேசியதாவது:- தமிழக அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

    குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நடத்தப்படுகிறது. அதில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களை கண்டறிந்து அங்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

    காரைக்குடியில் நடந்த முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், நலிந்தோர் உதவித் தொகைக்காக 13 பயனாளிகளுக்கு ரூ.32 ஆயிரம், தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித் தொகை மற்றும் ஓய்வூதிய உதவித் தொகைக்காக 26 பயனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 250, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் சக்கர நாற்காலிகள் மற்றும் மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்க 6 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 790, தோட்டக்கலை துறையின் மூலம் பவர் டில்லர் வாங்க 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

    மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மகளிர் தொழில் முனைவோர் கடன் மற்றும் பண்ணை சாராக் கடனாக 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், மகளிர் திட்டத்தின் மூலம் 202 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சத்து 45 ஆயிரம், வட்டார வளர்ச்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், தனிநபர் கழிப்பறை அமைக்க 20 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 69ஆயிரத்து 872 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், உதவி கலெக்டர் ஆஷாஅஜித், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஆவின் சேர்மன் அசோகன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்பு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் கோவிலூர் சென்றனர்.

    அங்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் ஆகியோர் அந்த பகுதியில் இயங்கி வரும் ரசாயன ஆலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நீர் நிலை, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கூறினர். இதையடுத்து அமைச்சர், கலெக்டர் ஆகியோர் ஆலையின் பின் புறம் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று, அங்கிருந்து மண் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் மண் பரிசோதனை முடிவுக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
    Next Story
    ×