search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதி சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
    X

    கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதி சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

    கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதி சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து, கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
    கும்மிடிப்பூண்டி:

    எண்ணூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி 18 டன் சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி இன்று அதிகாலை புறப்பட்டது. லாரியை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த அங்கமுத்து (35) ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பைபாஸ் சாலையில் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அங்கமுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    விபத்து பற்றி அறிந்ததும் கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் லாரி தீப்பற்றாமல் இருக்க உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    கவிழ்ந்த லாரியை கியாஸ் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சேதமடைந்த டேங்கரில் இருந்து சிறிய அளவில் கியாஸ் கசிவதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக திருப்பி விடப்பட்டது.

    எளிதில் தீப்பற்றும் அபாயம் இருப்பதால் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    டேங்கர் லாரியின் அருகே செல்போன் எடுத்து செல்லவும் தடை விதித்து உள்ளனர். இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரியை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கவிழ்ந்த லாரியில் உள்ள கியாசை வேறு லாரியில் ஏற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

    விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×