search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அதிரடி வெளியேற்றம்
    X

    மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அதிரடி வெளியேற்றம்

    ஈரோடு அருகே மாணவர் விடுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 மாணவிகள் அதிரடி வெளியேற்றப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 36). இவர் அந்த பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் 4 மாணவிகள் உள்பட 21 பேர் தங்கி படித்து வந்தனர்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பால்ராஜ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையொட்டி கடந்த 15-ந்தேதி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் பால்ராஜ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் செயல்பட்டு வந்த விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்க அனுமதி பெறப்பட்டு இருந்ததாகவும் மாணவிகள் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த விடுதியில் தங்கி இருந்த 4 மாணவிகள் ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஈரோடு பழைய பாளையத்தில் செயல்பட்டு வந்த விடுதியில் புகார் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி இருக்க அனுமதி பெறப்பட்டிருந்தது. 4 மாணவிகள் அங்கு சட்டவிரோதமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவிகள் பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதே போன்று வேறு எங்கேனும் அனுமதி இல்லாமல் விடுதிகள் செயல்படுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் செயல்படும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×