search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதகடிப்பட்டில் சமையல் மாஸ்டரை அடித்து கொலை- தொழிலாளி கைது
    X

    மதகடிப்பட்டில் சமையல் மாஸ்டரை அடித்து கொலை- தொழிலாளி கைது

    மதகடிப்பட்டில் சமையல் மாஸ்டரை அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    மதுரையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் புதுவை மதகடிப்பட்டு கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் மதுரை விடத்தகுளத்தை சேர்ந்த குருசாமி (வயது51 ) சமையல் மாஸ்டராகவும், மதுரை தொட்டியாம்பட்டியை சேர்ந்த கண்ணன்(40) என்பவர் சப்ளையராகவும் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் நாகராஜ் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றிருந்தார். ஓட்டலை குருசாமியும், கண்ணனும் நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கண்ணன் ஓட்டல் உரிமையாளர் நாகராஜிக்கு போன் செய்து குருசாமியை அடித்து போட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் நேற்று காலை ஓட்டலுக்கு விரைந்து வந்தார். அப்போது ஓட்டலில் குருசாமி அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கண்ணன் குடிபோதையில் குருசாமியை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு மதுரைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளி கண்ணனை கைது செய்ய நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு திருமங்கலம் பஸ் நிலையத்தில் ஊருக்கு தப்பி செல்ல நின்றிருந்த கண்ணனை சுற்றி வளைத்து கைது செய்து திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு சமையல் மாஸ்டர் குருசாமியை அடித்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசாரிடம் கண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் நாகராஜின் ஓட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு குடிப்பழக்கம் உண்டு. நான் தினமும் இரவு வேலை முடிந்ததும் மதுகுடித்துவிட்டு ஓட்டலில் குருசாமியுடன் தங்கி விடுவேன்.

    நேற்று முன்தினம் ஓட்டல் உரிமையாளர் நாகராஜ் திருச்சிக்கு சென்றார். அதனால் ஓட்டலை மூடிவிடும்படி குருசாமியிடம் தெரிவித்தேன். ஆனால் இதற்கு குருசாமி மறுத்து ஓட்டலை திறந்து பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை தயாரித்தார். மேலும் என்னை குருசாமி தகாத வார்த்தைகளால் திட்டி என்னை பற்றி ஓட்டல் முதலாளியிடம் போனில் தெரிவித்தார். இதனால் குருசாமி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவரிடம் தகராறு செய்தேன்.

    பின்னர் ஓட்டலில் வியாபாரம் முடிந்ததும் இரவு மதுக்கடைக்கு சென்று மதுகுடித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பினேன். அப்போது மீண்டும் இதுதொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    குடிபோதையில் இருந்த எனக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து குருசாமியின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் குருசாமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். ஆனால் குருசாமி இறந்து போவார் என தெரியாமல் இதுபற்றி ஓட்டல் உரிமையாளர் நாகராஜிக்கு போனில் தெரிவித்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தேன். அப்போது திருமங்கலம் பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு கண்ணன் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். போலீசார் கண்ணனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×