search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் திருத்தப்பட்ட பின் தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பு  வெளியானதா?
    X

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் திருத்தப்பட்ட பின் தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பு வெளியானதா?

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் திருத்தப்பட்ட பின்னரே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியானதாக தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா பாபு குற்றம்சாட்டியுள்ளார். #NGTorder #NGTorderdictated #sterlitemanagement
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்து ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு மதியம் 2 மணி அளவில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் 15-12-18 அன்று காலை 7.39 மணிக்கு என்.ஜி.டி.பி.ஏ. என்ற உபயோகிப்பாளர் ஐ.டி.யில் இருந்து ஆபாஷ் பாண்டியா என்ற உபயோகிப்பாளர் ஐ.டி.க்கு ஆவணம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அங்கு தீர்ப்பு ஆவணம் திருத்தப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆபாஷ் பாண்டியா என்பவர் வேதாந்தா நிறுவனத்தின் வங்கி கணக்கை கையாளுபவராக உள்ளார். இந்த ஆபாஷ் பாண்டியாவும், உபயோகிப்பாளர் ஐ.டி.யில் உள்ள ஆபாஷ் பாண்டியாவும் ஒரே நபரா? என்பது எங்களுக்கு தெரியாது. இதை போலீசார் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் கமிட்டி அறிக்கை எங்களுக்கு வரவில்லை. அதே நேரத்தில் ஆலை தரப்புக்கு உத்தரவு நகல் வந்து உள்ளது. இப்படி சில சட்டநடைமுறைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டு உள்ளது.

    வேதாந்தா நிறுவனமும், அதன் ஆலோசகர்களும், நீதித்துறையும் ரகசிய காப்பை அப்பட்டமாக மீறி உள்ளனர். இது நிரூபிக்கப்பட்டால் வேறு என்னென்ன அத்துமீறல்கள் இந்த தீர்ப்பில் நடந்து இருக்கும்? என்பது அம்பலமாகும்.

    இது தொடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்க உள்ளோம். தமிழக அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று அனைத்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அத்தனை முயற்சியிலும் ஈடுபடுவோம்.

    அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். இன்று தூத்துக்குடி கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். பசுமை தீர்ப்பாயத்தின்  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சாதகமான தீர்ப்பு மக்களுக்கு வர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NGTorder #NGTorderdictated #sterlitemanagement
    Next Story
    ×