search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்
    X

    மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்

    மண்டபம் உள்பட 14 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 14 பள்ளிகளை சேர்ந்த 2,630 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு மண்டபம் யூனியன் பகுதியில் உள்ள தங்கச்சி மடம், உச்சிப்புளி, வேதாளை, ராமேசுவரம், மண்டபம் முகாம், பாம்பன், கடுக்காய் வலசை, புதுமடம், இருமேனி, ரெட்டையூருணி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், தங்கச்சிமடம் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித யாகப்பா உயர்நிலைப்பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மாணவ- மாணவிகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விலையில்லா மடிக் கணினிகள், விலையில்லா சைக்கிள்கள், ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 151 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதில் இதுவரை 2 கட்டங்களாக 12 ஆயிரத்து 498 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கும் என மொத்தம் 15 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. ஜனவரி மாதம் முதல் மடிக்கணினிகள் வழங்கப்படும். மேலும் ஊரகப்பகுதிகளில் இணைய பயன்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக தமிழகத்தில் உள்ள 12ஆயிரத்து 524 ஊராட்சிகளை இணைய வழியில் ஒருங்கிணைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து சிரமமின்றி இணைய வழியில் பெற்று பயனடைய வாய்ப்பாக அமையும்.

    மாணவ-மாணவிகள் ஒழுக்கத்துடன் கல்வி கற்பதோடு, சமூக அக்கறையுடன் தங்களது எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனையை வளர்த்துக்கொண்டு அதனை அடைவதற்கு கடுமையாக உழைப்பதன் மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் பிரேம், மண்டபம் பாலதண்டாயுதபாணி உள்பட அரசு அலுவலர்கள், பள்்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×