search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மீண்டும் ரவுடி பிறந்தநாள் விழாவிற்கு அரிவாளுடன் திரண்ட கும்பல்: போலீசார் மடக்கி பிடித்தனர்
    X

    சென்னையில் மீண்டும் ரவுடி பிறந்தநாள் விழாவிற்கு அரிவாளுடன் திரண்ட கும்பல்: போலீசார் மடக்கி பிடித்தனர்

    சென்னையில் மீண்டும் ரவுடி பிறந்தநாள் விழாவிற்கு அரிவாளுடன் திரண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். #ChennaiPolice
    பெரம்பூர்:

    வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலத்தை சேர்ந்த பிரபல ரவுடி குங்பூ குமார். இவரது பிறந்தநாள் விழாவிற்கு சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடி கும்பல் ஒரே இடத்தில் திரளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்தநிலையில் புளியந்தோப்பு பகுதியில் வாகன சோதனையின்போது காரில் அரிவாளுடன் வந்த மாதவரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான கொளத்தூரை சேர்ந்த சிவா, புளியந்தோப்பை சேர்ந்த கோபால், ரமேஷ் ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 8 அரிவாள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல ரவுடி குங்பூ குமாரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பி வந்ததாக அவர்கள் கூறினர்.

    கைது செய்யப்பட்ட சரவணன் வட சென்னையை கலக்கி வந்த பிரபல தாதா சின்னா என்கிற கேசவலுவின் கூட்டாளி ஆவார். ஆந்திராவில் சட்டம் படித்த இவர் மீது கே.கே. நகரை சேர்ந்த காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் உள்ளன.

    மேலும் சின்னாவை கொலை செய்த ரவுடி ஆற்காடு சுரேசை தீர்த்து கட்ட திட்டமிட்டதாகவும் கைதானவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கைதான சரவணன் உள்பட 4 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே நடந்த ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 72 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் சரவணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடி பிறந்தநாள் விழாவில் ரவுடி கும்பல் அரிவாளுடன் ஒன்று திரண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விழாவில் எந்தெந்த பகுதி ரவுடிகள் பங்கேற்றனர் என்பது குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
    Next Story
    ×