search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலி கண் முன்பு கடத்தப்பட்டதாக கூறப்படும் காதலன் மீட்பு? போலீஸ் நிலையத்தில் விசாரணை
    X

    காதலி கண் முன்பு கடத்தப்பட்டதாக கூறப்படும் காதலன் மீட்பு? போலீஸ் நிலையத்தில் விசாரணை

    பவானி அருகே காதலி கண் முன்பு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காதலனை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சித்தோட்டை அடுத்து நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் சிவானந்தம் (23). பொறியியல் கல்வி படித்துள்ள இவர் நசியனூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    அதே நிறுவனத்தில் பவானியை அடுத்த ஒரிச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த மணியன் மகள் பூர்ணிமா (21) வேலை செய்து வந்தார். ஒரே நிறுவனத்தில் இருவரும் வேலை செய்ததால் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

    கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து இருவரின் வீட்டிலும் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு இருந்த போதிலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பச்சையம்மன் கோவிலில் பூர்ணிமாவின் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சிவானந்தனுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

    பின்னர் இருவரும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பவானி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    ஒரு வழிப்பாதையில் கார் சென்று கொண்டிருந்த போது பவானி தலைமை தபால் நிலையம் அருகே காரை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த மணமகன் சிவானந்தனை அடித்து, இழுத்துச் சென்று மற்றொரு காரில் கடத்திச் சென்றது.

    இதை தடுக்க முயன்ற பூர்ணிமாவை கீழே தள்ளிய கும்பல் மிரட்டி விட்டு சென்றது. இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன் பிறகு உறவினர்கள் அனைவரும் பவானி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இது தொடர்பாக மணமகள் பூர்ணிமா பவானி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அதில் தானும் சிவானந்தமும் திருமணம் செய்து கொண்டு திருமணத்தை பதிவு செய்ய எனது சகோதரர் பிரபு, அண்ணி பிரியா, பெரியம்மா கருப்பாயி மற்றும் கணவரின் நண்பர் சதீஷ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தோம்.

    தபால் நிலையம் அருகே சென்றபோது 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரில் வந்த சுமார் 20 பேர் காரை வழிமறித்து எனது கணவரை கடத்திச் சென்றனர்.

    நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் முருகேசன், சண்முகசுந்தரம், பிரகாஷ், புவனேஷ், அருண், சுரேஷ், ரமேஷ், ஜீவா, கோகுல், நந்தகுமார், கவின், மணிகண்டன் மற்றும் பெயர் தெரியாத 2 பேர் சேர்ந்து காரிலிருந்து வெளியே தர தரவென இழுத்து உதைத்து எனது கணவரை கடத்திச் சென்றனர்.

    இதனை தடுக்க முயன்றும் முடியவில்லை. எனவே, எனது கணவரை மீட்டுத்தர வேண்டும். எனக்கும் எனது கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட கூறப்படும் சிவானந்தம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அவர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அவர் உண்மையில் கடத்தப்பட்டாரா? நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. பூர்ணிமாவிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×