search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் -  முதல்வர்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #SterliteProtest #NGT
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் (வேதாந்தா) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை 3  வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.



    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றார்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், ஆலையை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

    எனவே, விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.  #SterliteProtest #NGT
    Next Story
    ×