search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்த கும்பல்
    X

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்த கும்பல்

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்து விட்டதால் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் செல்லாயிபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பச்ச மலையான் கோட்டை பிரிவு அருகே செல்போன் அழைப்பு வந்ததால் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தங்க சங்கிலியுடன் தப்பி சென்றனர்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தாவூத்உசேன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இப்பகுதியில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி நகை பறிக்கும் கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×