search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம்
    X

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம்

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே செட்டிச்சிமிழி கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் எரிவாயு, வெள்ளக்குடி பகுதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு நேற்று திடீரென திரண்ட பெருமாளகரம், கொடிமங்கலம், நீலனூர், மேலதிருமதிகுன்னம், அத்திசோழமங்கலம், மழையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிறுவனத்தின் கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், கெயில் நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மேலதிருமதிகுன்னம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீரையன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின்போது கெயில் நிறுவனத்தின் சார்பில் புயல் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் நடத்திய கிராம மக்கள் நிவாரண உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தின் வாசலில் சமைத்து சாப்பிட போவதாக கூறி, பாத்திரங்களையும், கியாஸ் அடுப்பையும் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கெயில் நிறுவன பொறுப்பு மேலாளர் கோடீஸ்வரன், கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திங்கட்கிழமைக்குள் நிவாரண உதவிகள் குறித்து முடிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×