search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம்- தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் அழைப்பு
    X

    ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம்- தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் அழைப்பு

    அண்ணா அறிவாலயத்தில் 16-ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவையடுத்து, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென திரண்டு வரும்படி தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள்- நிர்வாகிகள், பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் என கலைஞரின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

    அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற இருக்கிறது.

    கழகத்தின் தொண்டர்களாம் கலைஞரின் உடன் பிறப்புகள் யாவரும் ஆர்வ மிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதைத் தவிர்த்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அணிஅணியாய்த் திரள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    கலைஞர் நமக்கு வகுத்தளித்த கட்டுப்பாட்டு உணர்வினைக் காத்திட வேண்டும்.

    இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம்.

    அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.

    சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.

    அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது.

    அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து கட்டுப்பாடு காத்து ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு காட்டுகின்ற நன்றி செலுத்துகின்ற காணிக்கை!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KarunanidhiStatue
    Next Story
    ×