search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம்
    X

    அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம்

    தமிழக நலனுக்காக போராடி வரும் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தவே திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார். #SenthilBalaji #DMK
    சென்னை:

    கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொண்டர்களை அரவணைத்துச் செல்பவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். அந்த வகையில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன். அம்மாவின் மறைவுக்கு பிறகு ஒரு இயக்கத்தில் (அமமுக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். தற்போது தளபதியின் ஈர்ப்பால் அவர் முன்னிலையில் என்னை திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளேன்.



    கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன்.

    தமிழகத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சி தமிழக மக்களின் நலனுக்கு எதிரான மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. மத்திய பாஜக ஆட்சிக்கு அடிபணிந்து தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து செயல்படுகிறார்கள்.

    எனவே, தமிழக நலனுக்காக போராடி வரும் தளபதியின் கரத்தை வலுப்படுத்தவே திமுகவில் இணைந்துள்ளேன். தமிழக மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு, ஸ்டாலின் தலைமையை ஏற்பதுடன், பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வெற்றியை கொடுப்பார்கள். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தளபதியை தமிழக மக்கள் அமர வைப்பார்கள். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த வெற்றிப் பயணத்தில் என் முயற்சியும் சிறு பங்களிப்பாக இருக்கும்.

    தளபதியின் தலைமையில் கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும், கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெறுவற்கு திமுக நிர்வாகிகளுடன் சேர்த்து பணியாற்றுவேன். என் மனதில் இருந்த இருளை அகற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது உதயசூரியன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SenthilBalaji #DMK
    Next Story
    ×