search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஆட்சி கவிழும் - மு.க.ஸ்டாலின்
    X

    ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஆட்சி கவிழும் - மு.க.ஸ்டாலின்

    ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். #OPanneerSelvam #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளரும்,அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளருமான குருசாமி பாண்டியன், தே.மு.தி.க. வாசுதேவ நல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் துரைப்பாண்டியன், நெல்கட்டும் செவல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமையாத் தேவர், ஆர்.பாண்டியராஜன் ஆகியோரும் அ.தி.மு.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.

    விழாவில் முக ஸ்டாலின் பேசியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விரைவிலே அந்த தீர்ப்பு வரப்போகிறது. இந்த தீர்ப்பு வருகிறபோது உறுதியோடு சொல்கிறேன். நிச்சயமாக தமிழ்நாட்டில் இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக் கூடிய இந்த ஆட்சி இருக்கப் போவது இல்லை.

    ஒருவேளை அதில் இருந்து தப்பித்தாலும் இடைத்தேர்தல் இருக்கிறது. ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விவகாரம் நம்முடைய தலைவர் கருணாநிதி மறைவு காரணத்தினால் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல், அதே போல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இறந்து போன காரணத்தால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு தேர்தல் வரப்போகிறது.

    அந்த 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருமா? அல்லது பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து வரப்போகிறதா? அல்லது இந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு எல்லாம் சேர்த்து எம்.பி. தேர்தலும், எம்.எல்.ஏ. தேர்தலும் ஒன்றாக சேர்ந்து வரப்போகிறதா என்ற அந்த கேள்விக்குறி இருந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையிலே நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தாலும், எந்தச் சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அல்லது இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அந்த தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. நிச்சயமாக பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இதற்கு காரணம் ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் செய்து கொண்டிருக்கக் கூடிய அக்கிரமங்கள். ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் நாட்டைப் பற்றி கவலைப்படுகிறார்களா? இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்களா? மக்கள் படும் துன்பங்களை பார்த்து செயல்படுகிறார்களா? எங்கு பார்த்தாலும் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

    விவசாயிகள் ஒரு பக்கத்தில் போராட்டம், நெசவாளர்கள் நடுத்தெருவில் நின்று கொண்டு அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக போராடிக் கொண்டிருகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒருபக்கம் போராடுகிறார்கள். தொழிலாளர்கள் இன்றைக்கு உரிமைக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

    இப்படி எல்லாத் தரப்பு மக்களும் இன்றைக்கு இந்த ஆட்சியில் போராடுகின்றனர். சாலையில் வந்து மறியலில் ஈடுபடுகிற நிலைதான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

    கஜா புயல் டெல்டா பகுதியில் இருக்கக் கூடிய ஏறக் குறைய 12 மாவட்டங்களை தாக்கி இருக்கிறது. அங்கே இருக்கக் கூடிய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக தொலைத்து விட்டு நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கூட காப்பாற்ற முடியாத வகையில் ஒரு ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமா?

    ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம் என்ன கவலை என்று சொன்னால், தொடர்ந்து இந்த ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது, அப்படி தக்க வைத்துக் கொள்ள வேண் டும் என்று சொன்னால் மத்தியில் இருக்கும் பி.ஜே.பி. ஆட்சிக்கு அடிமைகளாக, எடுபிடிகளாக அவர்கள் இருக்க வேண்டும். இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

    அப்படி இருக்கக்கூடிய நிலையிலே நிச்சயமாக நாம் அடுத்த முறை ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற காரணத்தினால் தான் கொள்ளையடிக்கின்ற வகையில் கொள்ளையடித்து விட்டு போய் விடலாம் என்று நினைக்கிறார்கள்.

    இப்படி சூடு சொரணை என எதுவும் இல்லாத ஊழல் செய்யக் கூடிய நிலையில் கமி‌ஷன்- கரெப்‌ஷன்- கலெக்‌ஷன் என்ற நிலையிலேதான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட கூடிய நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. விரைவில் அதற்கான சூழ்நிலை வந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #OPanneerSelvam #MKStalin

    Next Story
    ×