search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுஷா
    X
    அனுஷா

    நாகர்கோவிலில் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை

    நாகர்கோவிலில் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    திருவட்டாரை அடுத்த வியனூரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் அனுஷா (வயது 20). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கண் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    அனுஷா, ஆஸ்பத்திரி விடுதியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். நேற்று மாலை திடீரென ஆஸ்பத்திரியின் 3-வது மாடிக்கு சென்ற அனுஷா, அங்கிருந்து திடீரென கீழே குதித்தார். தலையில் பலத்த அடிபட்ட அவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அனுஷா பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அனுஷாவின் உடலை கைப்பற்றி ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுஷாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    அனுஷா தற்கொலை செய்த தகவல் அவரது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அனுஷாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    அனுஷாவின் தற்கொலை குறித்து அவரது தந்தை நல்லதம்பி, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    அனுஷாவின் சாவில் சந்தேகம் இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு அனுஷா என்னுடன் செல்போனில் பேசினார். அப்போது விடுதி அறையில் நர்சு ஒருவரின் நகை திருடு போனதாகவும், அது தொடர்பாக தன்னிடம் விசாரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    நகை திருட்டு குறித்து அனுஷாவிடம் விசாரிக்கப்பட்டதால் அவர், மனம் உடைந்து விட்டார். இனி ஊருக்கு வர மாட்டேன் என்றும் கூறினார். இதன் காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    நல்லதம்பி புகார் குறித்து போலீசார் விடுதியில் விசாரணை நடத்தினர். அனுஷாவுடன் தங்கியிருந்த நர்சுகளிடமும் விவரம் சேகரிக்கப்பட்டது. அப்போது அனுஷா, அடிக்கடி செல்போனில் பேசுவதும், இதற்காக ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரை கண்டித்ததும் தெரிய வந்தது.

    அனுஷா தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை செல்போனில் பேசிக் கொண்டிருந்த தகவலும் போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அனுஷாவின் செல்போனை கைப்பற்றினர். அதில், அனுஷா யாருடன் அடிக்கடி பேசினார், இறப்பதற்கு முன்பு யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என்பது போன்ற விவரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    அனுஷாவுக்கு காதல் பிரச்சினை இருந்ததா? இதன் காரணமாக தொல்லைகளுக்கு ஆளானாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அனுஷா தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். 3 கோணங்களில் விசாரணை நடக்கிறது. விரைவில் உண்மை காரணம் தெரிய வரும். அனுஷாவை யாரும் தற்கொலைக்கு தூண்டினார்களா? என்பதையும் கண்டறிவோம். யார் தவறு செய்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×