search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் - தி.மு.க. வலியுறுத்தல்
    X

    பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் - தி.மு.க. வலியுறுத்தல்

    காரைக்குடி பகுதியில் பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதமாக மர்ம காய்ச்சல் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனாலும் நோயின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. எதனால் காய்ச்சல் வந்தது நோய்க்கான பெயர் என்ன அதற்கான சிகிச்சை முறை என்ன என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து கேட்டபோது மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு இதற்கு காரணம் இது பற்றி வேறு எதுவும் கருத்து கூற இயலாது என டாக்டர்கள் கூறுகிறார்களாம்.

    இதனால் இதற்கு பெயர் மர்ம காய்ச்சல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இக்காய்ச்சல் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தற்போது பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவும் சங்கராபுரம் ஊராட்சி பகுதியிலேயே பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது.

    தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் இதற்கான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் நோயாளியிடமோ அவர்களின் குடும்பத்தாரிடமோ டாக்டர்கள் காய்ச்சல் குறித்து எதுவும் கூற மறுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கேட்டால் இதற்கு மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு என்று டாக்டர்கள் கூறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கிற போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் வாய்மொழி உத்தரவு உள்ளது என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வந்த நோய் என்ன சிகிச்சை முறை என்ன என்பது குறித்து மருத்துவர்கள் யாரும் கூறுவதில்லை. இது மருத்துவ உலக தர்மத்திற்கு எதிரானது என மருத்துவர்களே கூறுகின்றனர்.

    இது குறித்து தி.மு.க. கட்சி சார்பில் தொழிற்சங்க நிர்வாகி மலையரசன் கூறியதாவது:- நோயாளியிடமோ அவர்களது குடும்பத்தினரிடமோ நோயின் தன்மையை அதற்கான சிகிக்சை முறையை கூற மறுப்பது மனித உரிமை மீறல். இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். சுகாதாரத்துறையின் வாய்மொழி உத்தரவு உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மக்களிடம் நற்பெயர் பெற்று உள்ள மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபடுவது சரியான செயலாகும். இதனை விடுத்து சுகாதாரத் துறை மனித உரிமை மீறலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×