search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் கைதிக்கு செல்போன் சப்ளை- சிறைக்காவலர் சஸ்பெண்டு
    X

    வேலூர் ஜெயிலில் கைதிக்கு செல்போன் சப்ளை- சிறைக்காவலர் சஸ்பெண்டு

    வேலூர் ஜெயிலில் கைதிக்கு செல்போன் சப்ளை செய்த சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா, புகையிலை என சகல உல்லாச வசதிகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் அடிக்கடி சிறைக்குள் ஆய்வு நடத்தி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    கடந்த மாதம் செய்யப்பட்ட ஆய்வில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சிறையில் உள்ள காவலர்கள் உதவியுடன் தான் கைதிகள் இதுபோன்று உல்லாசம் அனுபவிப்பதாக உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களை கையும் களவுமாக பிடிக்க ரகசியமாக குழு அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலமாக ஆய்வு செய்தனர்.

    கடந்த மாதம் 17-ந் தேதி தலைமை காவலர் தேவதாஸ் என்பவர் சிறை கைதிகளுடன் மிக நெருக்கமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது நடமாட்டத்தை கண்காணித்த போது கைதிகளுக்கு வெளியில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சப்ளை செய்ததார். அவரை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். இதையடுத்து தேவதாஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மேலும் ஒரு சிறைக்காவலர் கைதிக்கு செல்போன், பணம் சப்ளை செய்ததாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    வாணியம்பாடி சேர்ந்த கார்வின் மோசஸ் (45) சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும் சிறைகாவலர் கணபதிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கணபதியிடம் செல்போன், பணம் ஆகியவற்றை வீட்டில் வாங்கி தருமாறு மோசஸ் கூறியுள்ளார். அதன்படி சிறைகாவலர் கணபதி வாணியம்பாடியில் உள்ள மோசஸ் குடும்பத்தினரிடம் புதிய செல்போன், பணம் ஆகியவற்றை வாங்கி ஜெயிலில் மோசசிடம் கொடுத்தார்.

    ஜெயிலில் காவலர்கள் நடத்திய சோதனையில் மோசஸ் அறையில் இருந்து செல்போன், பணம் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சிறைகாவலர் கணபதி அதனை வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி சிறைக்காவலர் கணபதியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பணியாற்றும் 2ம் நிலை காவலர் திலகவதி (54) கடந்த செம்படம்பர் மாதம் பணிக்கு வந்தபோது நுழைவாயிலில் அவரை போலீசார் சோதனையிட்டனர்.

    அப்போது அவர் செல்போனை மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் பெண் போலீஸ் திலகவதியிடம் செல்போன் பறிமுதல் செய்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×