search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலப்பரீட்சையில் மோடி வீழ்த்தப்பட்டிருக்கிறார்- திருமாவளவன்
    X

    பலப்பரீட்சையில் மோடி வீழ்த்தப்பட்டிருக்கிறார்- திருமாவளவன்

    5 மாநில சட்டசபை தேர்தலில் மோடியா, ராகுலா என்று நடந்த பலப்பரீட்சையில் மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார் என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Modi #Election2018
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான பொதுத்தேர்தலின் முடிவுகள் மூலம் மக்கள் பாஜகவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

    பா.ஜ.க. கைகளில் நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களையும் பாஜக பறிகொடுத்து இருக்கிறது.

    தனது ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துபல முயற்சிகளை மேற்கொண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. மோடியா ராகுலா என்று நடந்த இந்த பலப்பரீட்சையில் ராகுல் வெற்றி பெற்றிருக்கிறார். மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார்.

    2019-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டி அடிப்பதற்கு பொது மக்கள் ஓரணியில் திரண்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

    ஏனென்றால் பாரதிய ஜனதாவுக்கு வலுவான செல்வாக்கு உள்ள மாநிலங்களில் மக்கள் இந்த தீர்ப்பை எழுதி இருக்கிறார்கள்.

    இதையொட்டி அவர்கள் மதத்தின் பெயரால் சனா தனத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று முளைக்க தொடங்கி இருப்பது தேர்தல் ஆதாயத்திற்காக தான் தென்னிந்தியாவிலும் வன்முறைகளை கட்ட விழ்த்து விட அவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்.

    இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் நம்புகின்றனர்.

    இதை எப்பாடு பட்டாலும் முறியடித்துவிட வேண்டுமென்று ஜனநாயக சக்திகள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.



    ராகுல்காந்தி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்வது வரலாற்றின் தேவையாக மாறி இருக்கிறது. அதற்கான வாய்ப்பை இத்தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.

    தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவசேனாவும் விலகி இருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணி பலவீனமடைந்து வருகிறது .

    பாரதிய ஜனதா கட்சி பலவீனமடைந்து வருகிறது. சனாதான கட்சிகளும் பலவீனமடைந்து வருகிறார்கள். இன்னும் அவர்களை முற்றிலுமாக பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அண்மையில் திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று கூறுகிறார்.

    தீண்டாமை என்பது அதில் இருந்துதான் வருகிறது. ஆகவே சாதி புத்தி என்பது சனாதன புத்தி என்பது எச் ராஜாவை ஆட்டிப்படைக்கிறது என்பது வெளிப்படுத்தும் வகையில் தான் அவர் கூறியிருக்கும் கருத்து உள்ளது.

    அவர் மீது தமிழக அரசு உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை அந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க பலம் உடைய கட்சியாக இருக்கிறது என ரஜினி நம்பினார். தேர்தலுக்கு பின்பு பா.ஜ.க பலம் இல்லாத கட்சி என்று ரஜினி உணர்ந்து இருக்கிறார். அதையே ரஜினி கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது.

    மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Modi #BJP #Election2018
    Next Story
    ×