search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்
    X

    முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்

    அமமுகவில் இருந்து முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் யாரும் வருத்தப்பட போவதில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #AMMK #Dhinakarana #SenthilBalaji
    சென்னை:

    கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர்.

    ஜெயலலிதா மறைந்தபின், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன் அதில் ஐக்கியமானார். அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர், செந்தில் பாலாஜி கருத்தை டி.டி.வி.தினகரன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம், தேர்தல் வந்தால் வேட்பாளர்களின் செலவுகளை கவனிப்பது குறித்தும் சில ஆலோசனைகளை செந்தில் பாலாஜி கேட்டபோது, அதை உதாசீனப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    இந்த சூழலில், சமாதான முயற்சி தோல்வி அடைந்ததன் எதிரொலியாக செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைய உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.



    இந்நிலையில், செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

    அதில், “சிலர் சுயநலத்துக்காக தலைமையை விட்டு விலகுவதும் மன்னிப்புக் கோரி இணைவதும் இயல்பான ஒன்றே.  துரோகிகளும், விரோதிகளும் அமமுகவின் வளர்ச்சியைத் தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப் போகிறார்கள்? 

    அமமுகவில் இருந்து சில நபர்களோ, குழுவோ சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பது பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போன்றது.

    அமமுகவை சீண்டிப்பார்ப்பது உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டு பார்ப்பதற்கு சமம். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானது. ஒரு சிறு குழு விலகிச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சம் இல்லாமல் போய்விடுமா?” என தெரிவித்துள்ளார். #AMMK #Dhinakarana #SenthilBalaji
    Next Story
    ×