search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பேசியபோது எடுத்தபடம்.
    X
    அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பேசியபோது எடுத்தபடம்.

    தினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு

    டி.டி.வி.தினகரனை முதல்வராக்குவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக தாக்கி பேசினார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji #TTVDhinakaran
    கரூர்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தினகரனால் தொடங்கப்பட்ட அ.ம.மு.க.வில் இணைந்தார். தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைய போவது உறுதியாகியுள்ளது.

    இதனால் அதிருப்தியடைந்த அரவக்குறிச்சி ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் மணிகண்டன், கரூர் நகர பாசறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    பின்னர் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரன் இருபது ரூபாய் நோட்டை காண்பித்த போதே கூறினேன். அப்போது தினகரனை முதல்வராக்காமல் விடமாட்டேன் என்றார். மேலும் தினகரனின் கூடாரம் காலியாகும் எனவும் கூறினேன். ஆனால் தற்போது 2 வாரத்தில் காலியாகி விட்டது.

    டி.டி.வி.தினகரனை முதல்வராக்குவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். தி.மு.க.வில் இணைந்தால் செந்தில்பாலாஜிக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். அவருடன் செல்வபவர்கள் வாசல் வரை சென்று திரும்பும் நிலையே ஏற்படும். அங்கிருந்து அ.தி.மு.க.விற்கு வரும் நபர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் கொடுக்கப்படும்.

    கட்சியில் போட்டிகள் இருக்கலாம். ஆனால் விசுவாசமாக இருக்க வேண்டும். பதவி வெறியில் திரியும் அவர் விரைவில் தினகரனை விட்டு சென்று விடுவார் என கூறி வந்தேன்.


    ஏற்கனவே செந்தில்பாலாஜி ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு சென்று பின்னர் பதவிக்காக அ.தி.மு.க.விற்கு வந்தார். தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த அவர் தி.மு.க.விற்கு செல்கிறார். அடுத்து எத்தனை கட்சிக்கு செல்வார் என்பது தெரியவில்லை. நமக்கு அ.ம.மு.க. எதிரி கிடையாது.

    நான் தான் சாகிற வரைக்கும் மந்திரி என்பது நடக்காதது. பதவி எல்லாம் அவரவர் தலையெழுத்துப்படிதான் அமையும். பிறந்தபோதே மந்திரியாக இருந்ததை போல் செந்தில்பாலாஜி செயல்படுகிறார். எனக்கு ஆண்டவனும், ஜெயலலிதாவும் கொடுத்த பதவி இது. 3 மாதங்களுக்கு முன்பே கட்சி தாவ செந்தில்பாலாஜி முடிவு செய்து விட்டார். தற்போது 4 தினங்கள் முன்பு வரை தினகரனுடன் இருப்பதாக ஏமாற்றியுள்ளார்.

    ஒரு அ.தி.மு.க. தொண்டன் கூட செந்தில்பாலாஜியின் பின்னால் தி.மு.க.வில் சென்று இணைய மாட்டார்கள். ஒரு வினைக்கு எதிர் வினை என்பது எப்போதும் உண்டு. அதேபோல் தி.மு.க.விற்கு சென்றாலும் அவரின் அமைச்சர் கனவு பலிக்காது. மேலும் அ.ம.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு திரும்பியவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

    செந்தில்பாலாஜி அ.தி.மு.க.விற்கு வருவதை எதிர்த்ததால் தான் அவர் தி.மு.க.விற்கு செல்வதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது யாரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் தான் முடிவு செய்வர் என்றார். மேலும் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேருவது குறித்து கேட்டபோது, அதனை அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கூறினார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji #TTVDhinakaran
    Next Story
    ×