search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதராப்பட்டில் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- 200 பேர் கைது
    X

    சேதராப்பட்டில் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- 200 பேர் கைது

    சேதராப்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியருக்கு தொழிலாளர் நல நிதி வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

    சேதராப்பட்டை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு 60 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

    அதேபோல் இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது. காலை 6 மணிக்கு முதல் ஷிப்ட் வேலைக்கு வந்தவர்களை ஏ.ஐ.சி.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகி மோதிலால், நாம் தமிழர் தொழிற்சங்கம் ரமேஷ், பாட்டாளி தொழிற்சங்கம் பாஸ்கர், விடுதலை சிறுத்தை தொழிற்சங்கம் முருகையன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வேலைக்கு செல்ல விடாமல் ஊழியர்களை தடுத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த சேதராப்பட்டு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று தொழிற் சங்க ஊழியர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 80 பேரை கைது செய்து கோரிமேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி ஜெயபால் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சேதராப்பட்டு மும்முனை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதராப்பட்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×