search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை முக ஸ்டாலின் ஏற்றினார்
    X

    114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை முக ஸ்டாலின் ஏற்றினார்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 114 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றினார். #DMK #MKstalin #DMKFlag
    சென்னை:

    தி.மு.க.வுக்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கொடிக்கம்பம் அண்ணா அறிவாலயத்தில் நடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்த கொடிக்கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் 320 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அந்த கம்பத்தை செய்த நிறுவனத்திடம்தான் இந்த 114 அடி உயர கொடி கம்பம் செய்யும் பணியும் ஒப்படைக்கப்பட்டது.

    2 ஆயிரத்து 430 கிலோ எடை இரும்பினால் கம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 760 மி.மீ. விட்டம் கொண்டது. இந்த கொடிக்கம்பத்தை நிறுவுவதற்காக 12க்கு 12 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டி இயற்கை பேரிடரையும் தாங்கும் வகையில் கான்கிரீட்டினால் அடித்தளம் அமைக்கப்பட்டு கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.


    20 க்கு 30 அடி அகலத்தில் பிரத்யேகமாக இதற்காக தி.மு.க. கொடி புனேயில் தயாரிக்கப்பட்டது. வெயில், மழை, காற்றில் சேதம் அடையாதபடி நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கொடிக்கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி, விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இரவிலும் ஒளிரும் வகையில் கொடிக்கம்பத்தில் ‘ஹைபீம்’ மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் தானாக எரிந்து அணையும்படி ‘டைமர்’ வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

    மோட்டார் மூலம் கொடி ஏற்றப்பட்டது. கொடி உச்சியை அடைவதற்கு 12 நிமிடங்கள் ஆனது. அதுவரை பேன்ட்-வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

    கொடி மேலே செல்ல செல்ல 5 ஆயிரம் கருப்பு- சிவப்பு நிற பலூன்களும் கூடவே பறக்கவிடப்பட்டன.

    கொடி ஏற்றப்பட்டதும் மு.க.ஸ்டாலின் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், தாயகம் கவி, எழும்பூர் ரவிச்சந்திரன், எம்.ஆர்.ராமச்சந்திரன், பூங்கோதை ஆலடி அருணா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #DMK #MKstalin #DMKFlag
    Next Story
    ×