search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தம்
    X

    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தம்

    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்
    பெரம்பலூர்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 28-ந் தேதி முதல் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை இணையதள வாயிலாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணித்தும், கடந்த 5-ந் தேதி தாலுகா அலுவலகங்களில் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூர் தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று பணியை புறக்கணித்து தாலுகா அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் போட்டு, அதன் கீழ் அமர்ந்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
    Next Story
    ×