search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
    X

    மோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    மோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MKStalin #PMModi

    சென்னை:

    எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்று இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டன.

    குறிப்பாக விவசாயிகளுடைய நலன்கள் மீது அக்கறையில்லாத ஒரு அரசாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி சமுதாயத்தைச் சேர்நத மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் இவர்கள் அத்தனை பேரும் இன்றைக்கு ஒரு பாதுகாப்பாற்ற சூழ் நிலையில் இருப்பதைப் பற்றி விவாதித்து இருக்கிறோம்.

    விரிவான பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது. ஒரு கூட்டுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற நிலையில் பேசப்பட்டது. எழுத்துரிமை, பேச்சுரிமை அதற்குரிய சுதந்திரம் எல்லாம் இந்த மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    குறிப்பாக பி.ஜே.பி. ஆட்சியைப் பொறுத்த வரையில் அது பி.ஜே.பி. ஆட்சியாக மட்டுமில்லாமல் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாகவும் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்து இருப்பதாக ஒரு செய்தி வந்தது.

    ஏற்கனவே இதே மோடி ஆட்சியில் அதாவது இன்று ராஜினாமா செய்திருப்பவரைச் சேர்த்து ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்கள் 2 பேர் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.


    ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த ரகுராம்ராஜன் ராஜினாமா செய்தது நாட்டிற்கு தெரியும். அதைத் தொடர்ந்து இன்று உர்ஜித்படேல் ராஜினாமா செய்து இருக்கிறார்.

    ஆகவே இந்த மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்களே ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த ஆட்சியினுடைய நிலையைப் பற்றி நாடு நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறது.

    ஆகவே நாட்டினுடைய பொருளதாரத்தின் மீது நடத்தப்பட்டிருக்கக் கூடிய ‘சர்ஜிகல் ஸ்டிரைக்‘ (துல்லிய தாக்குதல்) என்ற நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    ஆகவே குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையிலே அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திலே பேசுகிறபோது நான் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன்.

    ஒட்டு மொத்தமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை மனஸ்தாபங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மத்தியிலே ஒரு பாசிச ஆட்சி மதவெறி பிடித்திருக்கக் கூடிய ஒரு ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் முழுமையான ஒரு ‘மெகா’ கூட்டணி அமைத்து நாம் போராட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் என்னுடைய கருத்துக்களை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்.

    கேள்வி:- மேகதாது அணை தொடர்பாக சோனியா காந்தியிடம் பேசினீர்களா?

    பதில்:- சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்த நேரத்தில் இதுபற்றி நான் பேசினேன். அவரும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய மாநிலத்தைச் சார்ந்திருக்கக் கூடிய முதல்-மந்திரியிடம் பேசுவதாக என்னிடத்தில் உறுதி தந்திருக்கிறார்.

    அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை சந்தித்த போதும் இதுபற்றி நான் பேசி இருக்கிறேன்.

    கேள்வி:- 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தாமதப்படுத்துகிறது. மத்திய அரசிடமிருந்து 3 அ.தி.மு.க.வினருக்கு விடுதலை வாங்கியது. ஆனால் அந்த 7 பேரின் விடுதலை மீத தமிழக அரசு அக்கறை இல்லாமல் இருக்கிறதே?

    பதில்:- நீங்களே அதற்கு விளக்கம் சொல்லி விட்டீர்கள். அதுதான் பதில்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin #PMModi

    Next Story
    ×