search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி?
    X

    தினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி?

    செந்தில்பாலாஜி மட்டுமின்றி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #Senthilbalaji #DMK #TTVDhinakaran
    கரூர்:

    கரூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார்.

    சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான அவர் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த இருவார காலமாக செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளில் மாற்றம் தென்பட்டது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பின்னர் அவரது நடவடிக்கை ல் மாற்றம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதற்கிடையே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைய போவதாகவும், அக்கட்சி தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெறும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இணைந்த பின்னர் கரூருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து மிக பிரமாண்டமான முறையில் இணைப்பு விழாவினை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார். பெரும்பாலான நிர்வாகிகள் அவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய தி.மு.க.தான் சரியான களம் என ஆதரவாளர்கள் பலரும் கூறியுள்ளனர்.


    இருந்தபோதிலும் தினகரன் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறார். நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கரூர் வந்தார். அவர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அவர் செந்தில் பாலாஜியை சமாதானம் செய்ய வந்தாரா? அல்லது அவரும் தி.மு.க. பக்கம் சாய்கிறாரா? என்று கேள்வி எழுந்தது.

    இதுபற்றி பழனியப்பன் கூறும் போது, செந்தில் பாலாஜியை நேற்று முன் தினம் மட்டுமல்ல, சென்னையில் பல முறை சந்தித்து பேசியுள்ளேன். அதேபோலத்தான் தற்போதைய சந்திப்பும். அதற்காக அ.ம.மு.க.வை விட்டு விலகுகிறேன் என்பது ஒரு கதை. ஒருவரை சந்தித்ததால் அவருடன் செல்வேனா? இது சுத்த பொய் என்றார்.

    இந்தநிலையில் அ.ம.மு.க. கட்சியின் மாநில பொருளாளர் தஞ்சை ரங்கசாமி நேற்று செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்துவதற்காக வந்திருந்தார். நீண்ட நேரம் அவர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால் செந்தில்பாலாஜி வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இதனால் சமாதான முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

    தி.மு.க.வில் இணைவது பற்றியோ, இணைய மாட்டேன் என்றோ? எந்த கருத்தையும் செந்தில்பாலாஜி இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த இரு தினங்களாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பு பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் முகாமிட்டுள்ளனர்.

    அதே போன்று ஆதரவாளர்களும் ராமகிருஷ்ணபுரம் வந்த வண்ணம் உள்ளனர். அவர் எப்போது மவுனம் கலைப்பார் என ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் எதிர் முகாமில் உள்ள ஆளுங்கட்சியினரும் ஆர்வமாக உள்ளனர். செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணையும் வி‌ஷயம் பரபரப்பாக பேசப்படவேண்டும் என நினைப்பதாக தெரிகிறது. 16-ந்தேதி மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் நிச்சயம் மவுனம் கலைப்பார் என நம்பப்படுகி றது.

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த செந்தில்பாலாஜி அசைக்க முடியாத அளவுக்கு பலத்துடன் திகழ்ந்து வந்தார். மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்று திகழ்ந்து வந்த அவர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.

    இதனால் ஜெயலலிதா அவருக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார். அதற்கேற்றாற்போல் அவரும் செயல்பட்டு தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.

    மேலும் மாவட்டம் முழுவதும் அவருக்கென்று ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். தற்போது செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருடன் கரூர் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் பலரும் தி.மு. க.வில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செந்தில்பாலாஜி மட்டுமின்றி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    ஆனால் இந்த சர்ச்சை தமிழக அரசியலில் அ.ம.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சி என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். #Senthilbalaji #DMK #TTVDhinakaran
    Next Story
    ×