search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா இதயம் செயலிழக்கும் முன் மூச்சு திணறலால் அவதிப்பட்டார் - அப்பல்லோ டாக்டர் தகவலால் குழப்பம்
    X

    ஜெயலலிதா இதயம் செயலிழக்கும் முன் மூச்சு திணறலால் அவதிப்பட்டார் - அப்பல்லோ டாக்டர் தகவலால் குழப்பம்

    அப்பல்லோ டாக்டர் எல்.எப்.ஸ்ரீதர், ஜெயலலிதா 3 மணி நேரம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாக அளித்த புதிய தகவலால் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குழப்பம் அடைந்துள்ளது. #Jayalalithaa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எல்.எப்.ஸ்ரீதர் நேற்று ஆஜரானார். அவர் 2016 செப்டம்பர் 26, 28-ந் தேதிகளில் ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அதன் பிறகு டிசம்பர் 4-ந் தேதி இறுதியாக பார்த்ததாகவும் தெரிவித்தார்.

    ஜெயலலிதாவுக்கு இதயத்தில் எந்த கோளாறும் இல்லை, மரணம் சம்பவிக்கும் அளவுக்கு இதய நோய் பாதிப்பு இல்லை. எனவே அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என்று கூறியுள்ளார். அதேநேரம் டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழக்கும் முன் 3 மணி நேரம் மூச்சுத்திணறலால் அவர் மிகவும் அவதிப்பட்டார். உரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை அளித்தும் பலனின்றி அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தார் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    இது முந்தைய சாட்சிகளுக்கு நேர் எதிராக, முற்றிலும் புதிய தகவலாக உள்ளது. ஏற்கனவே சாட்சி அளித்தவர்கள் ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு முன் அவர் ஜெய் அனுமான் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தார் என்று கூறியிருந்தனர். இதனால் ஜெயலலிதா மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது உண்மையா? அல்லது நாடகம் பார்த்தது உண்மையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆணையத்தில் நேற்று சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர், ஆணையத்தில் நடக்கும் விசாரணை குறித்த தகவல்களை பேட்டி அளிக்க சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் வாதிட்டார். இதுகுறித்து ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

    சேலம், மேட்டூர் அணை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் லிங்கன் என்பவர் ஆணையத்தில் நேற்று ஆஜராகி, தான் சில சாட்சியங்களை அளிக்க விரும்புவதாகவும், ஜெயலலிதாவுடன் தான் தற்போதும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதிக்கு முன்பு ஜெயலலிதா உங்களிடம் ஏதாவது பேசியிருந்தால் தெரிவிக்கலாம். அதற்கு பிறகு அவர் உங்களிடம் பேசுவதாக கூறுவதை ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.

    ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையத்தில் ஆஜராகி சாட்சி அளிக்கிறார்.  #Jayalalithaa #ArumugasamyCommission
    Next Story
    ×