search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் இருந்து மீளாத கிராமங்கள்
    X

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் இருந்து மீளாத கிராமங்கள்

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    நெற்களஞ்சியமாக விளங்கிய டெல்டா மாவட்டங்கள் கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலில் உருகுலைந்து போய் விட்டன.

    லட்சக்கணக்கான மரங்களையும், மின் கம்பங்களையும் சாய்த்த கஜா புயல் விவசாயிகள் வாழ்வதாரமாக விளங்கிய பயிர்களையும விட்டு வைக்கவில்லை. தென்னையை பிள்ளையை போல் வளர்த்த விவசாயிகள் அவைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சியை கண்டு கண்ணீர் வடித்த வண்ணம் உள்ளனர்.

    தங்கள் முன்னோர் உழைப்பில் உருவான தென்னைகளும், தங்களால் வளர்க்கப்பட்ட தென்னைகளும் முறிந்தும் வீழ்ந்தும் கிடப்பது அவர்களுக்கு பேரிடியாக அமைந்து விட்டது.

    வாழைகள், கரும்புகள் அடியோடு வீழ்ந்து விட்டதால் உழவர் பண்டிகையாம் தைபொங்கலை வரவேற்க தயாராக இருந்த விவசாயிகளுக்கு பொங்கலுக்கு நெல்லை மட்டுமே நம்பி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து அடுத்தடுத்து பெய்த கனமழை நெற்பயிர்களையும் நீரில் மூழ்கடித்து விட்டது.

    வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர் அருகில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி அருகில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மின் வினியோகம் வழங்கபடவில்லை. இதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யம், கொள்ளிடம், தலைஞாயிறு, தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களிலும் முறிந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு வழங்க மின் வாரியத்தினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுக்கும் போது நல்ல நிலையில் நிற்கும் சில பழைய மின்கம்பங்கள் முறிந்து விடுகின்றன. இதனால் அப்பணியை மீண்டும் செய்யும் அவல நிலை ஏற்படுகிறது. புயலில் இருந்து மீளாத கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க இன்னும் 10 நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.

    பள்ளிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் பகலில் தங்களது இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

    வேதாரண்யம், தரங்கம்பாடி, சேதுபாவா சத்திரம் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் படகுகள் சேதமாகி விட்டதால் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முழு வீச்சில் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலர்கள், புயல் பாதிப்பு பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர் . இருந்தபோதிலும் கஜா புயலில் இழந்த வாழ்வை மீண்டும் பெற முடியுமா? என்ற அச்சம் அகலாமல் டெல்டா மாவட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×