search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 நாள் வேலைவாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
    X

    100 நாள் வேலைவாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகள் அதிமுக சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கஜா புயலினால் ஆயிரக்கணக்கான வீடுகளும் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும் சாய்ந்தன. பலத்த சேதமடைந்த வேதாரண்யம் பகுதியில் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    புயலில் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி புதிதாக தென்னங்கன்றுகளை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மட்டைகள் விழுந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இவற்றை பார்வையிட்ட அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதித்த கூரை வீடுகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 6 லட்சம் கீற்றுகள் அரசு மூலம் வாங்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சுமார் 36 ஆயிரம் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இவற்றை சரிசெய்ய வெளி மாவட்டங்களிலிருந்து கீற்றை கொண்டுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    எனவே நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகளை நூறு கீற்றுகள் ரூ.800க்கு அ.தி.மு.க. சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    கஜா புயல் பாதித்த கோடியக்கரைக்கு நூறு சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 35 ஊராட்சிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். 35 ஊராட்சிகளிலும் மின் விநியோகத்தை சீர்செய்ய 3 அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது மின்சாரம் கிடைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    புயல் பாதித்த 181 வருவாய் கிராமங்களில் 105 வருவாய் கிராமங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வருவாய் கிராமங்களுக்கு இன்று வரவு வைக்கப்படும்.

    இந்த தொகை வரவு வைக்கப்பட்ட உடன் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தொகையாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×