search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    டெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

    அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டலுக்கு செல்லாமல் ஆட்டோவில் சுற்றியதாக, டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #delhiwomanmolestation
    கும்பகோணம்:

    வங்கி பணி பயிற்சிக்காக டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ரெயில் மூலம் கடந்த 2-ந்தேதி கும்பகோணத்துக்கு வந்து இறங்கினார்.

    பின்னர் தான் தங்கும் ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் பல இடங்களுக்கு சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் இது எந்த இடம் என்று கேட்டுள்ளார்.

    தொடர்ந்து அவர் கேட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் செட்டிமண்டபம் பை பாஸ் ரோட்டில் அந்த பெண்ணை இறக்கி விட்டு சென்று விட்டார். நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம்பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்கள் அவரிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.

    ஆனால் அந்த வாலிபர்கள் ஆள்நடமாட்டமில்லாத இடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேரையும் அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர். பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்தமன், அன்பரசு ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? என்பது மர்மமாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

    கும்பகோணம் நகரில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்த போது அதில் 4, 5 ஆட்டோக்கள் மட்டும் நள்ளிரவு நேரத்தில் சென்றது தெரியவந்தது. இதனால் அந்த ஆட்டோ டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் ஒரு ஆட்டோ டிரைவரை பற்றி மட்டும் துப்பு துலங்கவில்லை.

    இதற்கிடையே திருவிடைமருதூர் திருப்பணிபேட்டையில் ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ மட்டும் வித்தியாசமாக உருமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது பற்றி சக ஆட்டோ டிரைவர்கள் அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்ற ஆட்டோ டிரைவர்கள் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த ஆட்டோவை கைப்பற்றி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த ஆட்டோ டிரைவர் பெயர் குருமூர்த்தி (வயது 25) என தெரியவந்தது.

    இதனால் குருமூர்த்தியை போலீசார் விசாரணைக்காக கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி தான் அந்த இளம் பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று 1 மணி நேரமாக சுற்றி திரிந்ததும் நள்ளிரவில் நடுரோட்டில் அந்த பெண்ணை இறக்கி விட்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குருமூர்த்தியை கைது செய்தனர்.

    கைதான குருமூர்த்தி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். கடந்த மாதம் தான் எனது தாய் கடன் வாங்கி இந்த ஆட்டோவை எனக்கு வாங்கி கொடுத்தார்.

    நான் இரவு பகலாக உழைத்து வந்தேன். இந்த நிலையில் தான் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு டெல்லியை சேர்ந்த இளம்பெண் என் ஆட்டோவில் ஏறி அவர் தங்கும் ஓட்டலுக்கு செல்லுமாறு கூறினார். அவர் பேசிய ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி எனக்கு புரியாததால் அவரிடம் அதிக பணம் வசூலித்து விடலாம் என்று பேராசை பட்டேன்.


    இதற்காக அவர் கூறிய ஓட்டலுக்கு உடனே செல்லாமல் நகரின் பல இடங்களில் சுற்றி திரிந்து அழைத்து சென்றேன். அப்போது அந்த பெண் தனது செல்போனில் கூகுள் மேப் மூலமாக நான் தவறான பாதையில் செல்வதை கண்டு பிடித்து விட்டார். பின்னர் என்னை ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சல் போட்டார்.

    நான் கூறிய ஓட்டலுக்கு அழைத்து செல்லாமல் வேறு பாதையில் செல்வதாக என்னை திட்டினார். இதனால் பயந்து போன நான் அந்த பெண்ணை நள்ளிரவு நேரத்தில் செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டு அவரிடம் பணம் கூட வாங்காமல் அங்கிருந்து உடனே சென்று விட்டேன்.

    பின்னர் மறுநாள் தான் நான் ஆட்டோவில் இறக்கி விட்ட பெண் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். மேலும் அந்த பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர் என்பதை அறிந்து பயந்து போனேன். இதனால் போலீசிடம் இருந்து தப்பிக்க எனது ஆட்டோவில் சிறு சிறு மாற்றம் செய்தேன். இருந்த போதிலும் போலீசார் என்னை எப்படியோ பிடித்து விட்டனர். மற்றபடி எனக்கு இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் டெல்லி பெண்ணை எங்கிருந்து ஏற்றி சென்றாய்? எந்த வழியாக சுற்றி அழைத்து சென்றாய்? என்று அந்தந்த பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  #delhiwomanmolestation
    Next Story
    ×